விழுப்புரம், செங்கையில் இன்று மழை
சென்னை: விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் நேற்றைய அறிக்கை:
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளி மண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. அதனால், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யலாம். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.