வளரந்த பிறகு அவருடன் நடிப்பேன்.. அம்மாவிடம் ஓபனாக சவால் விட்ட கீர்த்தி சுரேஷ்.. நிறைவேற்றிட்டாங்க ப்பா
சென்னை: தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். அழகு மட்டுமின்றி திறமையையும் கொண்டிருக்கும் அவர் மகாநடி படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் வென்றிருக்கிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் அவர் தன் தாயிடம் சவால் விட்ட விஷயம் தெரியவந்திருக்கிறது.
நடிகை மேனகாவுக்கு பிறந்த கீர்த்தி சுரேஷ் இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகை. தமிழில் அவர் இது என்ன மாயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டடித்தது. இதன் காரணமாக அவர் குறுகிய காலத்திலேயே தமிழில் விக்ரம், சூர்யா, விஜய் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க தொடங்கிவிட்டார். தமிழில் மாதிரியே தெலுங்கிலும் பிஸியான நடிகையாக மாற தொடங்கினார்.
கீர்த்திக்கு தேசிய விருது: தெலுங்கில் மகாநடி என்ற பெயரிலும், தமிழில் மகா நடிகை என்ற பெயரிலும் வெளியான சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்திருந்தார். அசத்தலான பெர்ஃபார்மென்ஸை கொடுத்திருந்த அவர் அதற்காக தேசிய விருதையும் வென்றார். என்னதான் விருது கிடைத்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்காமல் இருந்தது. அந்த சூழலில்தான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்தார்.
அடுத்த ரவுண்டு: அப்படம்தான் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம். மெகா ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து மறு ரவுண்டு வந்தார். அந்தவகையில் சைரன், ரகுதாத்தா போன்ற படங்களில் நடித்த அவர் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடித்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
காதலருடன் திருமணம்: இதற்கிடையே அவர் தனது நீண்ட கால காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்ய முடிவெடுத்து கோவாவில் வைத்து திருமணமும் செய்துகொண்டார். ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி அந்தத் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. மணம் முடித்த பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார் கீர்த்தி சுரேஷ். அவரது நடிப்பில் அடுத்ததாக தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன.
சவால் விட்ட கீர்த்தி சுரேஷ்: இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது தாயிடம் விட்ட சவால் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது, சிவக்குமாருடன் சேர்ந்து நடிகையும், கீர்த்தியின் தாயுமான மேனகா மொத்தம் மூன்று படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஐந்தாம் வகுப்பு படித்தபோது மேனகாவும், சிவக்குமாரும் சேர்ந்து நடித்த படத்தை பார்த்தாராம். அப்போது தன் தாயிடம், நான் வளர்ந்த பிறகு சிவக்குமாரின் மகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பேன் என்று சவால் விட்டாராம். சொன்னபடியே தானா சேர்ந்த கூட்டம் படட்தில் நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.