வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்: அரசு ஆயத்த நிலையும், மக்களுக்கான அறிவுரையும்
வாரத்தில் 5 நாள் வேலையை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.28 முதல் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என வங்கிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வரும் 26, 27 ஆகிய தேதிகள் வார இறுதி விடுமுறை நாட்களாக இருப்பதால், அதைத் தொடர்ந்து 3 நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. எனவே. 5 நாட்கள் வங்கிப் பணிகள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இது வாடிக்கையாளர்கள், பொது மக்கள் மத்தியில் சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தவிர்க்கும் வகையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று (27-ம் தேதி) வங்கிகள் செயல்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய ஊரக வங்கிகள் செயல்படுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. வங்கிக் கிளைகள், அலுவலகங்கள், ஏடிஎம் இணைப்பு கிளைகள் மற்றும் பணக் காப்பகங்களும் (Currency Chests) அன்று செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த வேலை நிறுத்தத்தை நடத்துவதில் வங்கி ஊழியர்கள் ஆர்வம் காட்டுவது ஏன், அவர்களின் கோரிக்கைகள் என்னென்ன என்பதை சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஏன்?
வங்கி ஊழியர்கள் போராட்டத்தின் பிரதான கோரிக்கை, வாரத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே வேலை. இதன்படி அனைத்து சனிக்கிழமைகளுமே விடுமுறை நாட்களாக இருக்கும். இப்போதைக்கு மாதத்தின் 2-வது மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்தக் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில், ரிசர்வ் வங்கி, மத்திய அரசுத் துறைகள், இன்சூரன்ஸ் துறைகளில் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே ஊழியர்கள் வேலை செய்வதை வங்கி ஊழியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
மேலும், வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்பதை 2024 ஒப்பந்தத்தில் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) ஒப்புக்கொண்டது, ஆனால் மத்திய அரசு இன்னும் அமல்படுத்தவில்லை என்று வங்கி ஊழியர்கள் சங்கங்கள் கூறுகின்றன.
இது குறித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் (AIBOC) டெல்லி தலைவரும், அகில இந்திய மூத்த துணைத் தலைவருமான குஷால் குப்தா, “வங்கி ஊழியர்கள் இரவு பகலாக கடுமையாக உழைக்கின்றனர். தற்போதுள்ள ஓய்வற்ற நடைமுறை அவர்களின் வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலையை (work-life balance) வெகுவாகப் பாதிக்கிறது,” என்கிறார்.
அதேபோல், “தற்போது டிஜிட்டல் வங்கி சேவைகள் பரவலாக இருப்பதால், வங்கிக் கிளைகள் ஒரு நாள் மூடப்பட்டாலும் வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் சிரமம் இருக்காது. வங்கி விடுமுறை நாட்களிலும் ஏடிஎம் மற்றும் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்கள் தொடர்ந்து செயல்படும்” என்றார்.
வங்கி ஊழியர்களுக்கு 5 நாள் வேலைக்கான கோரிக்கை முதன்முதலில் 2012-ல் எழுப்பப்பட்டது, அதன் பின்னர் 2015-ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் வங்கி ஊழியர்களுக்கு மாதத்திற்கு இரண்டு சனிக்கிழமைகள் விடுமுறை வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறாக வேலை - வாழ்க்கை சமநிலை, அரசு ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதி ஆகியனவற்றை சுட்டிக்காட்டி 5 நாள் வேலை என்பதை ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஓய்வூதிய உயர்வுக்கான கோரிக்கை
மற்றொரு கோரிக்கை, ஓய்வூதிய உயர்வு தொடர்பானது. ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களின் ஓய்வூதியத்தை, தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப உயர்த்த வேண்டும் என்றும் வங்கி சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
வங்கிப் பணியில் இருக்கும் வங்கி ஊழியர்களின் சம்பளம் குறிப்பிட்ட கால இடைவெளியில் உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால், 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள், அவர்கள் ஓய்வு பெற்ற காலத்தில் இருந்த சம்பள விகிதத்தின் அடிப்படையிலேயே தான் இன்னும் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களின் அடிப்படை ஓய்வூதியம் வாழ்நாள் முழுவதும் மாறாமல் இருப்பதால், பழைய ஓய்வூதியதாரர்களுக்கும், தற்போதைய ஊழியர்களின் புதிய சம்பள விகிதத்துடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியத்திற்கும் இடையே பெரும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.
எனவே, வங்கி ஊழியர்கள் 90% பேரை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் 7 சங்கங்களை உள்ளடக்கிய UFBU, அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரே மாதிரியான பஞ்சப்படி (DA) கணக்கீட்டு முறை மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) உள்ளவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு (OPS) மாறுவதற்கான விருப்பம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி UFBU சங்கங்கள் ஏற்கனவே செப்டம்பர் 11, 2026 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வரும் 28 தொடங்கி 3 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 30 , வங்கிகளின் அரையாண்டு கணக்கு முடிவு நாள். இது வராக்கடன் ஒதுக்கீடு, கணக்கு சரிபார்ப்பு, கருவூல நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய நிதிப் பணிகள் நடைபெறும் முக்கியமான நாளாகும் என்பதாலேயே இந்தப் போராட்டம் மிகுந்த பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது எனலாம்.
முன்கூட்டியே சம்பளம்..
இந்நிலையில், செப்டம்பர் 28 முதல் 30 வரை நடைபெறவுள்ள 3 நாள் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, செப்டம்பர் 2026-க்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத் தொகைகளை முன்கூட்டியே வரும் செப்டம்பர் 25 (வெள்ளிக்கிழமை) அன்றே வழங்கலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் எஸ்பிஐ இன்று (வியாழக்கிழமை) ஓர் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதில், செப்டம்பர் 28 முதல் தொடங்கும் 3 நாள் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்துக்கு முன்பாகவே, தங்களது அனைத்து முக்கிய பரிவர்த்தனைகளையும் முடித்துக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
பல பொதுத்துறை வங்கிகள், வாடிக்கையாளர்கள் முடிந்தவரை டிஜிட்டல் வங்கி சேவைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளன. இதில் மொபைல் பேங்கிங், இணைய வங்கி சேவை (Internet Banking) மற்றும் UPI ஆகியவை அடங்கும்.
தகுதியான சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் ATM மற்றும் வங்கி தொடர்பாளர் (Business Correspondent - BC) மையங்களையும் பயன்படுத்தலாம்.வேலைநிறுத்த காலத்தில் ATM-களில் போதுமான பணம் இருப்பதை உறுதி செய்யுமாறும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.