📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 09, 2026 11:03 AM

"வயது ஒரு தடை என நினைத்தவர் வெளியேறியதால் புவனேஸ்வருக்கு வாய்ப்பு".. சடகோபன் ரமேஷ் அதிரடி கருத்து

"வயது ஒரு தடை என நினைத்தவர் வெளியேறியதால் புவனேஸ்வருக்கு வாய்ப்பு".. சடகோபன் ரமேஷ் அதிரடி கருத்து

"வயது ஒரு தடை என நினைத்தவர் வெளியேறியதால் புவனேஸ்வருக்கு வாய்ப்பு".. சடகோபன் ரமேஷ் அதிரடி கருத்து

சென்னை: சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு புவனேஸ்வர் குமார் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரை இந்திய முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் மறைமுகமாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் மீண்டும் தேர்வாகியுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த அவர், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று சிறப்பாக பந்து வீசி இருந்தார். தொடர்ச்சியாக 2025 மற்றும் 2026-ல் அந்த அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

புவனேஸ்வரின் கம்பேக் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சடகோபன் ரமேஷ், "4 ஆண்டுகளுக்குப் பிறகு புவனேஸ்வர் குமார் அணிக்குத் திரும்பியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் 35 வயதைக் கடந்த பின்னரும் சிறப்பாக ஆடி, வயது என்பது வெறும் எண்தான் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளனர். இதன் மூலம் தேர்வுக்குழுவின் மனநிலையும் தெளிவாக மாறியுள்ளது.

வயது ஒரு தடை என நினைத்த முன்னாள் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் வெளியேறிய பிறகே, சுதந்திரமாக முடிவெடுக்கத் தொடங்கிய மற்ற தேர்வாளர்கள் வயதை விடத் திறமைக்கு முன்னுரிமை கொடுத்து புவனேஸ்வரைத் தேர்வு செய்துள்ளனர். தனது அபார ஸ்விங் பந்துவீச்சால் ஐபிஎல் தொடரில் பேட்டர்களை மிரட்டிய புவனேஸ்வருக்கு கிடைத்த சரியான அங்கீகாரம் இது.

புவனேஸ்வர் குமார் இந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டால், அதன் அடுத்த நன்மையாக முகமது ஷமிக்கும் இந்திய அணியின் கதவுகள் நிச்சயம் திறக்கும். கடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு கழற்றிவிடப்பட்ட முகமது ஷமிக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்" என்று சடகோபன் ரமேஷ் தெரிவித்தார்.

முகமது ஷமி கடந்த ஓராண்டாக உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து பந்து வீசி வருகிறார். ஆனால், அவருக்கு உடற்தகுதி இல்லை எனக் கூறி இந்திய அணி நிர்வாகம் புறக்கணித்து வருகிறது. அவருக்கும் வாய்ப்பு கிடைக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கத் துவங்கி உள்ளனர்.