0.08 வினாடியில் த்ரில் வெற்றி.. 4x400 ரிலேவில் இந்தியாவுக்கு வெள்ளி.. ஆசிய விளையாட்டில் அசத்தல்
0.08 வினாடியில் த்ரில் வெற்றி.. 4x400 ரிலேவில் இந்தியாவுக்கு வெள்ளி.. ஆசிய விளையாட்டில் அசத்தல்
நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளப் பிரிவில், இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. 4x400 மீட்டர் கலப்பு ரிலே ஓட்டப்பந்தயத்தில், இந்திய அணி கடைசி நொடியில் வியக்கத்தக்க வகையில் முன்னேறி வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. முன்னதாக 10000 மீட்டர் பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் சீமா குமாரி வெண்கலம் வென்ற நிலையில் அடுத்த சில நிமிடங்களில் இந்தப் பதக்கம் கிடைத்தது.
உச்சக்கட்ட பரபரப்புடன் நடைபெற்ற 4x400 மீட்டர் கலப்பு ரிலே இறுதிப்போட்டியில், இந்திய அணி பந்தய தூரத்தை 3:14.46 நிமிடங்களில் கடந்து 2-வது இடத்தைப் பிடித்தது. பஹ்ரைன் அணி 3:12.87 நிமிடங்களில் கடந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. வியட்நாம் அணி 3:14.54 நிமிடங்களில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் வென்றது. வியட்நாமை விட வெறும் 0.08 வினாடிகள் முன்னதாகவே இந்திய அணி எல்லையைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தியது.
இந்திய அணியில் பூவம்மா மாச்செட்டிரா, விஷால் தென்னரசு, மனு தெக்கினலில் மற்றும் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பந்தயத்தின் தொடக்கத்தில் பின்தங்கியிருந்த இந்திய அணியை, கடைசி சுற்றில் ஓடிய வித்யா ராம்ராஜ் தனது அசுர வேகத்தால் முன்னிலைக்குக் கொண்டு வந்தார். வியட்நாம் வீராங்கனையின் கடும் சவாலை முறியடித்து, தனது முழு மூச்சையும் கொடுத்து சீறிப்பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்.
ஆசிய விளையாட்டில் 4x400 கலப்பு ரிலே பிரிவில் 2018 ஜகார்த்தா தொடரில் இந்தியா தங்கமும், 2023 ஹாங்சோ தொடரில் வெள்ளியும் வென்றிருந்தது. தற்போது 2026-லும் வெள்ளி வென்றதன் மூலம், இப்பிரிவில் தொடர்ந்து 3-வது முறையாகப் பதக்கம் வென்று இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளது.