📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 06, 2026 10:03 AM

16 ஹெக்டர் நிலப்பரப்பில் உள்துறைக் குழுவுக்கு புதிய ஓட்டுநர் பயிற்சிக் களம்

16 ஹெக்டர் நிலப்பரப்பில் உள்துறைக் குழுவுக்கு புதிய ஓட்டுநர் பயிற்சிக் களம்

உள்துறைக் குழுவுக்கான புதிய பயிற்சிக் களத்தை ஏறக்குறைய 16 ஹெக்டர் நிலப்பரப்பில் கட்டுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது, தற்போது அட்மிரால்டியில் இயங்கிவரும் பயிற்சிக் களத்திற்கு மாற்றாக அமையும்.

உள்துறைக் குழுவின் எதிர்காலச் செயல்பாடுகளையும் பயிற்சித் தேவைகளையும் புதிய பயிற்சிக் களம் பூர்த்தி செய்யும் என்று உள்துறை அமைச்சு ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று தெரிவித்தது.

அரசு கொள்முதல் தளமான ஜிபிஸ்-இல் வெளியிடப்பட்ட குத்தகைகளுக்கான ஆவணங்களின்படி புதிய பயிற்சிக் களத்திற்கான சாத்தியக்கூறுகளையும் வடிவமைப்புத் திட்டங்களையும் உருவாக்க உள்துறை அமைச்சு தற்போது ஒரு நிறுவனத்தைத் தேடி வருகிறது.

உள்துறைக் குழுவின் நீண்டகாலப் பயிற்சித் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, நிலத்தை அதிகளவு பயன்படுத்தும் வகையில் அடுக்குமாடிக் கட்டடம் கட்டவும் அமைச்சு திட்டமுட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட வடிவமைப்பு நிலையின்போது, குத்தகையில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு இந்த 16 ஹெக்டர் நிலத்தின் அமைவிடம் தெரிவிக்கப்படும்.

எனினும், புதிய பயிற்சிக் களம் எங்கு அமையும் என்பது குறித்த கூடுதல் விவரங்களை ‘த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளேடு கேட்டபோது அமைச்சு தெரிவிக்கவில்லை.

சிங்கப்பூர்க் காவல் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சிங்கப்பூர் சிறைச்சாலை சேவை உள்ளிட்ட பல்வேறு உள்துறைக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகளின் பயிற்சிக்கு புதிய பயிற்சிக் களம் துணைபுரியும் என்று அமைச்சு குறிப்பிட்டது.

இந்தப் பயிற்சிக் களத்தில் 20,000 சதுர மீட்டர் முதல் 90,000 சதுர மீட்டர் வரையிலான பல திறந்தவெளி பயிற்சி இடங்களும் இடம்பெறவிருக்கின்றன.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

400சிசிக்கும் அதிகமான திறன்கொண்ட கனரக மோட்டார் சைக்கிள்களான ‘கிளாஸ் 2’ வாகனங்கள், 3,000 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள கார்கள், மருத்துவப் போக்குவரத்து வாகனங்களை உள்ளடங்கிய ‘கிளாஸ் 3’ வாகனங்கள் போன்றவற்றை வைத்துப் பயிற்சி அளிக்க இந்த இடங்கள் தேவைப்படும்.

மேலும், பீரங்கி வாகனங்கள், தரைப்படை சண்டை வாகனங்களான கவச வாகனங்கள், அத்துடன் 16.5 மீட்டர் நீளம், 2.55 மீட்டர் அகலம், 4.2 மீட்டர் உயரம் மற்றும் 48 டன் வரை எடையுள்ள ‘கிளாஸ் 4’ மற்றும் ‘கிளாஸ் 5’ கனரக வாகனங்களுக்கான பயிற்சிகளுக்கும் இது பயன்படுத்தப்படும்.