2026 ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை வென்ற இந்தியா.. துப்பாக்கி சுடுதலில் மகளிர் அணி வெள்ளி
2026 ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை வென்ற இந்தியா.. துப்பாக்கி சுடுதலில் மகளிர் அணி வெள்ளி
நகோயா: ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா தனது முதல் பதக்கக் கணக்கை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் குழுப் பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன், சோனம் மஸ்கர் மற்றும் விதர்சா வினோத் ஆகியோர் அடங்கிய இந்தியக் கூட்டணி தொடக்கம் முதலே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் சீன அணி புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்ற, இந்திய வீராங்கனைகள் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றனர்.
தனிநபர் தகுதிச் சுற்றிலும் இந்திய வீராங்கனைகள் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அசத்தினர். சோனம் மஸ்கர் 634.1 புள்ளிகள் குவித்து 2-வது இடத்தையும், இளவேனில் வாலறிவன் 633.5 புள்ளிகள் குவித்து 7-வது இடத்தையும் பிடித்தனர். இதன் மூலம் இவர்கள் இருவரும் தனிநபர் பிரிவு இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்று, இந்தியாவுக்கு மேலும் இரு பதக்க வாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர்.
துப்பாக்கி சுடுதல் மட்டுமின்றி, எம்.எம்.ஏ விளையாட்டிலும் இந்தியாவுக்கு மற்றுமொரு பதக்கம் உறுதியாகியுள்ளது. பெண்களுக்கான 60 கிலோ பாரம்பரிய எம்.எம்.ஏ பிரிவில் இந்திய வீராங்கனை சுச்சிகா தரியால் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது பதக்க வேட்டையை மிக உற்சாகமாகத் தொடங்கியுள்ளது.