3வது டி.20 போட்டியில் வெ.இண்டீசை சாய்த்த இந்தியா: தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆடுவதே வெற்றிக்கான வழி: கேப்டன் ஸ்ரேயாஸ் பேட்டி
3வது டி.20 போட்டியில் வெ.இண்டீசை சாய்த்த இந்தியா: தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆடுவதே வெற்றிக்கான வழி: கேப்டன் ஸ்ரேயாஸ் பேட்டி
இந்தூர்: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டி கொண்ட டி.20 தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் வெஸ்ட்இண்டீசும் வெற்றிபெற்ற நிலையில் 3வது போட்டி நேற்று இந்தூரில் நடந்தது. டாஸ்வென்ற வெ.இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 223 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அபிஷேக் சர்மா 69 (30பந்து), இஷான் கிஷன் 37 (18பந்து), திலக்வர்மா 28, நிதிஷ்குமார் ரெட்டி 21 ரன் அடித்தனர். வெஸ்ட்இண்டீஸ் பவுலிங்கில் ரோஸ்டன் சேஸ், ஷமார் ஜோசப், ஷமார் ஸ்பிரிங்கர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணியில் ஷிம்ரான் ஹெட்மையர் 43, கமீல் பூரன் 42, ஷமார் ஸ்பிரிங்கர் 32, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 32 ரன் அடித்தனர். 20 ஓவரில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களே எடுத்தது. இதனால் 14 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. இந்திய பவுலிங்கில் அர்ஷ்தீப்சிங் 3, நமன்தீர் 2 விக்கெட் வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதுபெற்றார். வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் கூறியதாவது:
“பனிப்பொழிவு இல்லாதது பவுலர்களுக்கு மிகப்பெரிய உதவியாக அமைந்தது. களத்தில் எதைச் செயல்படுத்த வேண்டும் என்ற தெளிவும் உறுதியான தன்னம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது. எந்தவொரு கடினமான சவாலையும் ஏற்க ஒவ்வொரு பவுலரும் தயாராக இருந்தனர். ஒரு கேப்டனாக எனக்கு அதுவே மகிழ்ச்சி அளித்தது. பேட்டிங்கில் அபிஷேக் சர்மா பவர்பிளேயில் அதிரடி தொடக்கத்தை கொடுத்தார்.
அதன்பின் இஷான் கிஷன் எதிரணியைத் துவம்சம் செய்தார். கடந்த சில மாதங்களாகவே இஷான் கிஷன் அபாரமான ஃபார்மில் விளையாடி வருகிறார். கடைசி கட்டத்தில் பிரின்ஸ் யாதவ் 6 பந்தில் அடித்த 13 ரன்களும் ஆட்டத்தில் மிக முக்கியமானதாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் போன்ற கேம் சேஞ்சர்கள் உள்ள அணியை ஒருபோதும் சாதாரணமாக எடைபோட முடியாது. எனவே அலட்சியத்திற்கு இடம் கொடுக்காமல், நமது வழக்கமான திட்டங்களைச் சரியாகப் பின்பற்றி தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடுவதே வெற்றிக்கான வழி”, என்றார். தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்க 4வது போட்டி நாளை மறுநாள் ஐதராபாத்தில் நடக்கிறது.
ரிவர்ஸ் ஸ்விங் எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று!
ஆட்டநாயகன் அர்ஷ்தீப் சிங் கூறுகையில், பனி இல்லாததால் பந்து சற்று ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆனது. இறுதிக்கட்டத்தில் ரிவர்ஸ் ஸ்விங் மூலம் பந்துவீசுவது எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று. சர்வதேச கிரிக்கெட் வீரராக, நல்ல நாட்களும் மோசமான நாட்களும் வரும், அதிலிருந்து மீண்டு வந்து சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதையும் அறிவோம். பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடும் போது தான் பவுலராக நமது திறமையையும் மன வலிமையையும் சோதித்துப் பார்க்க முடியும், என்றார்.
டெத் ஓவர்களில் யார்க்கர் எப்படி வீசுவது என காட்டி விட்டனர் !
தோல்விக்கு பின் வெ.இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் கூறியதாவது: “பவுலிங்கில் இன்னும் துல்லியமாகச் செயல்பட்டிருக்க வேண்டும். தொடக்கத்தில் தேவையின்றி அதிக பவுண்டரிகளை விட்டுக்கொடுத்துவிட்டோம். அபிஷேக் சர்மா- இஷான் கிஷனின் ஆபத்தான கூட்டணியை ரோஸ்டன் சேஸ் மூலம் உடைத்து ஆட்டத்திற்குள் மீண்டும் வந்தது பாராட்டுக்குரியது. எனினும் சேஸிங்கில் வெற்றியை எட்ட வலுவான தொடக்க பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. கடைசி கட்டத்தில் இந்திய பவுலர்களின் செயல்பாட்டைப் பாராட்டியே ஆக வேண்டும். டெத் ஓவர்களில் மிகத் துல்லியமாக யார்க்கர்களை எப்படி வீச வேண்டும் என்பதை எங்களுக்குச் செய்து காட்டிவிட்டனர். வெற்றிக்கான பெருமை இந்திய பவுலர்களையே சாரும்” என்றார்.
1024 பந்தில் 2000 ரன்...
இந்திய வீரர் அபிஷேக் சர்மா சர்வதேச டி.20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2ஆயிரம் ரன் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் 1024 பந்தில் இந்த இலக்கை எட்டினார். சூர்யகுமார் யாதவ் 1164, ஆரோன் பிஞ்ச் 1283, மேக்ஸ்வெல் 1304, ஹர்திக்பாண்டியா 1390 பந்துகளில் 2ஆயிரம் ரன் எடுத்து அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.