5 பந்தில் 1 ரன்.. இந்திய கேப்டனின் ஸ்டம்பை பறக்கவிட்ட பவுலர்.. ரஞ்சி கோப்பை தொடரில் சொதப்பிய கில்
5 பந்தில் 1 ரன்.. இந்திய கேப்டனின் ஸ்டம்பை பறக்கவிட்ட பவுலர்.. ரஞ்சி கோப்பை தொடரில் சொதப்பிய கில்
மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் 2026 ரஞ்சி கோப்பை தொடரில் ஆடிய முதல் இன்னிங்ஸில் மோசமாக அவுட் ஆகி இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான சவால் மிகுந்த டெஸ்ட் தொடருக்குப் புறப்படுவதற்கு முன்பாக, ரஞ்சி கோப்பை போட்டியில் ஆடிய சுப்மன் கில் வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்குப் அதிர்ச்சி அளித்துள்ளார். நியூ சண்டிகரில் நடைபெற்று வரும் சத்தீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர், தனது முதல் இன்னிங்ஸிலேயே கிளீன் போல்டாகி நடையைக் கட்டினார். சொந்த மண்ணில் டெஸ்ட் பயிற்சி பெற நினைத்த அவருக்கு ஆரம்பமே பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
எலைட் குரூப் பி பிரிவில் நடைபெறும் இந்தப் போட்டியின் முதல் நாளில், 26-வது ஓவரின் முதல் பந்தில் விஹான் மல்ஹோத்ரா ஆட்டமிழந்தார். இதையடுத்து 4-வது வீரராக சுப்மன் கில் கம்பீரமாகக் களம் புகுந்தார். ஆனால் சத்தீஸ்கர் பந்துவீச்சாளர் அஜய் மண்டல் வீசிய 27-வது ஓவரின் 3-வது பந்து கில்லின் தற்காப்பு பேட்டிங்கைத் தகர்த்து ஸ்டம்புகளைப் பதம் பார்த்தது. வெறும் 5 பந்துகளை மட்டுமே சந்தித்த கில் 1 ரன்னில் போல்டானார். இதனால் பஞ்சாப் அணி 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பெரும் சரிவைச் சந்தித்தது.
உள்ளூர் ரஞ்சி கிரிக்கெட்டில் சுப்மன் கில்லுக்கு இது முதல் சறுக்கல் அல்ல. கடந்த ஜனவரியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் வெறும் 2 பந்துகளை மட்டுமே சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானார். பின்னர் 2-வது இன்னிங்ஸிலும் 32 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரை இடதுகை சுழற்பந்து வீச்சாளர் பார்த் புட் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே வீழ்த்தினார். சவாலான உள்ளூர் ஆடுகளங்களில் சுப்மன் கில் தடுமாறுவது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச டெஸ்ட் அரங்கில் 43 போட்டிகளில் ஆடி 3,043 ரன்கள் குவித்துள்ள சுப்மன் கில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் 2-வது அதிகபட்ச ரன் குவிப்பாளராக உள்ளார். இந்திய கேப்டனாகவே 1,000 ரன்களுக்கு மேல் விளாசியுள்ளார். 2026-ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 126 ரன்கள் குவித்தார். வரும் நவம்பர் 19 அன்று வெலிங்டனில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில், முன்னணி பேட்டரான சுப்மன் கில் உள்ளூர் போட்டியில் 1 ரன்னில் அவுட்டானது இந்திய அணி நிர்வாகத்திற்கு சற்று தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.