8.5 ஓவரில் முடிந்த டி20 மேட்ச்.. உலக சாதனைகளை உடைத்த ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா ஜோடி
8.5 ஓவரில் முடிந்த டி20 மேட்ச்.. உலக சாதனைகளை உடைத்த ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா ஜோடி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஜோடி பிரம்மாண்ட உலக சாதனை படைத்துள்ளது. எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் குவித்த இந்த ஜோடி, சர்வதேச மகளிர் டி20 வரலாற்றில் ஒரே காலண்டர் ஆண்டில் 9 முறை 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த உலகின் முதல் ஜோடி என்ற இமாலய சாதனையைப் பதிவு செய்துள்ளது. மேலும், இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே நிர்ணயித்த 103 ரன்கள் இலக்கை வெறும் 8.5 ஓவர்களில் எட்டி பல்வேறு சாதனைகளை செய்தனர்.
இதற்கு முன்பு 2026 ஆண்டில் ஹாங்காங் வீராங்கனைகளான யாஸ்மின் தஸ்வானி மற்றும் நதாஷா மைல்ஸ் ஜோடி 8 முறை 50 ரன்களுக்கு மேல் சேர்த்ததே உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்திய தொடக்க ஜோடி தற்போது தகர்த்தெறிந்துள்ளது. அத்துடன், 2026 ஆண்டில் மட்டும் இந்திய மகளிர் அணி பதிவு செய்த 17-வது டி20 சர்வதேச வெற்றி இதுவாகும். இதன் மூலம் கடந்த 2018-ல் 16 வெற்றிகள் பெற்ற தனது முந்தைய சாதனையை முறியடித்து இந்திய அணி புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து 103 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் ஷஃபாலி வர்மா ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 24 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 25 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 55 ரன்கள் விளாசினார். கேப்டன் ஸ்மிருதி மந்தனா 25 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணி 8.5 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. மகளிர் டி20 வரலாற்றில் 100 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை துரத்திய போது, 67 பந்துகள் மீதமிருக்க வெற்றி பெற்றது புதிய உலக சாதனையாகும். ராய்ப்பூரில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பெண் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த இந்த வெற்றி மேலும் சிறப்பானதாக மாறியது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்கூட்டியே கைப்பற்றி முத்திரை பதித்துள்ளது.