ஆசிய கோப்பை போட்டி நிறைவு விழா: இந்திய தேசியக் கொடி ஏந்தி செல்கிறார் நீரு தண்டா
புதுடில்லி: ஆசிய கோப்பை போட்டியின் நிறைவு விழாவில், துப்பாக்கிச் சுடும் வீராங்கனை நீரூ தண்டா இந்திய தேசியக் கொடி ஏந்தி செல்கிறார்.
ஜப்பானின் நகோயா நகரில் ஆசிய விளையாட்டு போட்டி செப்டம்பர்19 முதல் நடக்கிறது. இன்றைய( அக்டோபர் 02) நிலவரப்படி, இந்தியா 15 தங்கம் , 25 வெள்ளி, 35 வெண்கலம் என 75 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
நிறைவு விழா நாளை மறுநாள் நடக்கிறது. இதில், நீரு தண்டா பெண்கள் அணியை தலைமை ஏற்று தேசியக் கொடி ஏந்தி செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சுடுதலில் இரண்டு தங்கம் மற்றும் வெள்ளி என மூன்று பதக்கங்களை வென்ற நீரு தண்டா, இந்தியா திரும்பிவிட்டார். தேசியக் கொடி ஏந்தி செல்வதற்காக , நாளை காலை அவர் ஜப்பான் திரும்புகிறார்.ஆண்கள் அணிக்கு தேசியக் கொடி ஏந்தி செல்லும் வீரர் குறித்து நாளை முடிவு செய்யப்படும் என ஆசிய விளையாட்டுக்கான இந்திய அணியை நிர்வகிக்கும் குழுவின் துணைத்தலைவர் அஞ்சலி பகவத் கூறினார்.