ஆசிய விளையாட்டு போட்டி 2026.. வுஷூவில் வெள்ளி வென்றார் இந்தியாவின் ரோஷிபினா தேவி.. ஹாட்ரிக் பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டி 2026.. வுஷூவில் வெள்ளி வென்றார் இந்தியாவின் ரோஷிபினா தேவி.. ஹாட்ரிக் பதக்கம்
நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், வுஷூ விளையாட்டில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை நவோரெம் ரோஷிபினா தேவி வெள்ளிப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான 60 கிலோ சான்டா இறுதிப்போட்டியில் சீன வீராங்கனையிடம் போராடி தோல்வியடைந்த அவர், வெள்ளிப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தினார்.
வியாழக்கிழமை நடைபெற்ற தங்கப் பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில், சீனாவின் பலம் வாய்ந்த சியாவோயு ஜாங்கை ரோஷிபினா எதிர்கொண்டார். தொடக்கம் முதலே கடுமையான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய சீன வீராங்கனை, முதல் சுற்றை 5-0 எனவும், 2-வது சுற்றை 5-0 எனவும் கைப்பற்றினார். இதனால் ரோஷிபினா 0-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்ந்து வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தியடைந்தார்.
தங்கம் கைநழுவினாலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து 3-வது முறையாகப் பதக்கம் வென்று ரோஷிபினா தேவி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இவர் இதற்கு முன்பு 2018 ஜகார்த்தா ஆசிய போட்டியில் வெண்கலமும், 2023 ஹாங்சோ ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார். தற்போது 2026 ஜப்பான் ஆசிய விளையாட்டிலும் வெள்ளி வென்று தனது தொடர்ச்சியான ஹாட்ரிக் பதக்க வேட்டையை நிறைவு செய்துள்ளார்.
மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த 25 வயதான ரோஷிபினா தேவி, தனது விளையாட்டுச் சாதனைகளுக்காக 2023-ல் நாட்டின் உயரிய அர்ஜுனா விருதைப் பெற்றவர் ஆவார்.
ரோஷிபினா வென்ற இந்த வெள்ளிப் பதக்கத்தின் மூலம், நடப்பு 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதில் இந்தியா இதுவரை 1 தங்கம், 6 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.