ஆகாயப்படை மருத்துவ உதவி: சிங்கப்பூர் மீட்பு நடவடிக்கை
சிங்கப்பூரின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்த கப்பலில் இருந்து சனிக்கிழமை (செப்டம்பர் 12) அவசர மருத்துவ உதவி கேட்டு அழைப்பு வந்தது.
அதனையடுத்து, பாதிக்கப்பட்ட நபரைக் காப்பாற்ற சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் தேடல், மீட்புப் பிரிவான ‘ரெஸ்கியூ 10’ களமிறங்கியது.
அந்நபரைக் கப்பலிலிருந்து மீட்டு, சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அக்குழு கொண்டு வந்தது.
உதவிக்கான அழைப்பு கிடைத்ததும் கப்பலில் இருந்த பாதிக்கப்பட்டவரை உடனடியாக ‘ரெஸ்கியு10 எச்225எம்’ ரக மீட்புக்கான ஹெலிகாப்டரைக் கொண்டு மீட்டதாகத் தனது ஃபேஸ்புக் பதிவில் ஆகாயப்படை தெரிவித்தது.
மேலும்,“எங்கள் விமானப் பணியாளர்கள் நோயாளியைக் கூடுதல் மருத்துவச் சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். துல்லியம், குழுப்பணி, அயராத உழைப்பு ஆகியவற்றின் மூலம் மற்றொரு மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது,” என அந்தப் பதிவில் அது குறிப்பிட்டது.
மருத்துவமனையின் புதிய அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அருகில் காலேஜ் ரோட்டில் (College Road) அமைந்துள்ள புதிய ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் ‘ரெஸ்கியு10 எச்225எம்’ ரக ஹெலிகாப்டர் வந்து இறங்குவதை ஆகாயப்படையின் ஃபேஸ்புக் பதிவில் பதிவேற்றப்பட்ட படங்களில் காண முடிந்தது.