📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 13, 2026 08:37 AM

ஆன்லைன் டிக்கெட்டை ஆம்னி பேருந்து நிர்வாகம் ரத்து செய்தால் மாற்று பேருந்துக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தல்

ஆன்லைன் டிக்கெட்டை ஆம்னி பேருந்து நிர்வாகம் ரத்து செய்தால் மாற்று பேருந்துக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தல்

சென்னை: ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை வாகன உரிமையாளர்களால் ரத்து செய்யப்பட்டால், அந்தப் பயணிகளுக்கு மாற்று பேருந்தில் பயணம் செய்ய வாகன உரிமையாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப். 12, 13, 14 ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால், சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அதிகமாக பொதுமக்கள் பயணம் மேற்கொள்வார்கள். எனவே, இதுதொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் அதிகாரிகளுடன் கடந்த 9-ம் தேதி ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கூடுதல் பேருந்துகள்: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 1,099 பேருந்துகளுடன், கூடுதலாக 1,255 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2,354 பேருந்துகள் இயக்க தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 10-ம் தேதி முதல் நேற்று அதிகாலை வரை தமிழகம் முழுவதும் 2,379 ஆம்னிபேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில், பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளிடம் நேரடியாக பயணக் கட்டணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு திருப்பி வழங்கநடவடிக்கை எடுக்கப்பட்டது. 400 ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட் டதுடன், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் விளக்கம் கோரி அறிவிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

சிறப்பு வாகன தணிக்கை தகுதி சான்றிதழ் இல்லாமலும், உரிய சாலை வரி செலுத்தா மலும் இயக்கப்பட்ட 4 வெளிமாநில ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. அப்பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கு உடனடியாக மாற்றுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சிரமமின்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆம்னி பேருந்துகளில் அதிககட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், அனுமதி, வரி, தகுதி சான்றிதழ் உள்ளிட்ட விதிமீறல்களை கட்டுப்படுத்தவும் செப்.16-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சிறப்பு வாகன தணிக்கை நடைபெறவுள்ளது.

பயணச்சீட்டு ரத்து விவகாரம்: ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டபயணச்சீட்டு, வாகன உரிமையாளர்களால் ரத்து செய்யப்படும் போது, அப்பயணிகளுக்கு மாற்றுப்பேருந்தில் பயணம் செய்ய அந்த வாகன உரிமையாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்தின் அனுமதிச்சீட்டின் மீது மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ளமுக்கிய பேருந்து நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்ப கூடுதல் அரசு சிறப்பு பேருந்துகளை உடனுக்குடன் இயக்குவதற்கும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்மை இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.