`ஆவின் பாலில் ரசாயனக் கலப்பு’ குற்றம்சாட்டும் பால் உற்பத்தியாளர் சங்கம்... கண்டுகொள்ளாத தமிழக அரசு!
`ஆவின் பாலில் ரசாயனக் கலப்பு’ குற்றம்சாட்டும் பால் உற்பத்தியாளர் சங்கம்... கண்டுகொள்ளாத தமிழக அரசு!
மரத்தடி மாநாடு
`ஏரோட்டி’ ஏகாம்பரம், வாழைத்தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். `வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் `காய்கறி' கண்ணம்மாவும் அங்கு வந்து சேர்ந்தனர். வேலையை முடித்து கை, கால்களைக் கழுவிவிட்டுக் கயிற்றுக் கட்டிலில் வந்தமர்ந்த ஏரோட்டி, ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார்.
``இந்த வருஷம், டெல்டா மாவட்டங்களில் குறுவைச் சாகுபடி இல்லாமலே போச்சு. அதை நினைச்சாலே ரொம்ப வேதனையா இருக்கு. டெல்டா விவசாயிகளுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்காம். நெல் சாகுபடி கைவிடப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பொருளாதார இழப்பு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய்னு பொருளாதார நிபுணர்கள் சொல்றாங்க. மேலும், கொஞ்ச நாள்ல தமிழ்நாட்டில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு வரும்னு, அரிசிக்குப் பற்றாக்குறை ஏற்படும்னும் சொல்றாங்க. அதே மாதிரி, கால்நடைகளுக்கு வைக்கோலுக்கும் தட்டுப்பாடு வருமாம். இதைப் பத்தி எல்லாம் அரசியல்வாதிகளுக்கு அக்கறையே இல்லை.
கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்குச் சட்டப்படி தர வேண்டிய தண்ணீரைத் திறந்துவிடாததால், டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகளும் விவசாய நிலங்களும் வறண்டு கிடந்த நிலையிலும்... முதல்வர் விஜய் நடிச்ச `ஜனநாயகன்’ பட வெளியீட்டை ஆளுங்கட்சியினர் கொண்டாடினாங்க. ஆளுங்கட்சிதான் இப்படினு பார்த்தால், எதிர்க்கட்சிக்காரங்க அதைவிட மோசம். காவிரி பிரச்னைக்காக தஞ்சாவூரில் போராட்டம் நடத்துறோம்னு சொல்லிட்டு, எதைஎதையோ பேசி சர்ச்சையை உருவாக்கிட்டாங்க. உடனே, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை போலீஸ் கைது செஞ்சதால், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கவனமும் திசை திரும்பிடுச்சி.
காவிரி பிரச்னைங்கறது தமிழ்நாட்டின் முதன்மையான வாழ்வாதாரப் பிரச்னை. தண்ணீர் தராத கர்நாடக அரசையும், சட்டப்படி தண்ணீரை வாங்கித் தர மறுக்கும் மத்திய அரசையும் கண்டிச்சு, ஆளும்கட்சியும் எதிர்க்கட்சிகளும் சேர்ந்து போரட்டம் நடத்தி ஒற்றுமையைக் காட்டியிருக்கணும். அப்படி நடந்திருந்தா அரசியல் அழுத்தம் ஏற்பட்டு கர்நாடக அரசும் மத்திய அரசும் கொஞ்சமாவது இறங்கி வந்திருக்கும், நீதிமன்றமும் கவனத்தில் எடுத்திருக்கும்’’ என்று ஆதங்கத்துடன் சொன்னார், ஏரோட்டி.
``சரியா சொன்னய்யா. மத்த மாநிலங்களில் வாழ்வாதாரப் பிரச்னைகளில் எல்லா கட்சிக்காரங்களும் கைகோத்து ஒத்துமையா போராடுறாங்க. தமிழ்நாட்டிலோ இப்படி ஒரு சாபக்கேடு’’ என்று வேதனையுடன் சொன்னார், காய்கறி.
``இதைவிடக் கொடுமையான விஷயம் ஒண்ணு நடந்துட்டிருக்கு’’ என்று ஆரம்பித்தார் வாத்தியார்...
``தமிழ்நாட்டு மக்களுக்குக் குடிக்கக்கூட தண்ணீர் தர கர்நாடகா மறுக்குது. காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் சொன்ன தீர்ப்புகளைக் கொஞ்சம் மதிக்கிறதில்லை. தமிழ்நாட்டை நிரந்தரப் பாலைவனம் ஆக்குறதுக்காக, மேகதாது அணை கட்ட கர்நாடக ஆட்சியாளர்கள் துடியா துடிக்கிறாங்க. ஆனா, அவங்களுக்குச் சாதகமா தமிழக அரசு சேவை செஞ்சுட்டுருக்கு.
தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவுக்கு பெட்ரோல், டீசல் கொண்டு போக, மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம் நிறுவனம்… கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் குழாய் பதிக்கிறதுக்கான வேலைகளை செஞ்சுட்டிருக்கு. இதுக்கு அந்தப் பகுதி விவசாயிகள் கடுமையா எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க. ஆனால், காவல்துறை மூலம் விவசாயிகளை அடக்கி, ஒடுக்கி நிலங்களைக் கைப்பற்றிக் கொடுக்க த.வெ.க அரசு முயற்சி செய்றதா தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் குற்றம்சாட்டுறாங்க. இது, `தமிழக வெற்றிக் கழக அரசாங்கம் தமிழ்நாட்டுக்குச் செய்யும் மாபெரும் துரோகம்'னு மனம் நொந்து சொல்றாங்க.
நிலம் தர மறுக்கும் விவசாயிகளைக் காவல்துறையினர், சட்டவிரோதமா காவல்நிலையத்துக்கு அழைச்சிட்டுப் போயி மிரட்டுறதாவும் சொல்றாங்க.
அந்தப் பகுதிகளில் விவசாய நிலங்களின் சந்தை மதிப்பு ஒரு சென்ட் 4 லட்சம் ரூபாயாம். ஆனால், பாரத் பெட்ரோலியம் நிறுவனம், 2 லட்சம் ரூபாய்க்குத்தான் நிலத்தை வாங்குறாங்களாம். அதே கிராமங்களில் இருக்கிற சில நிலங்களுக்கு ஒரு சென்ட்டுக்கு 11 ஆயிரம் ரூபாய் மட்டும் விலை கொடுத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கவும் முயற்சிகள் நடக்கிறதா சொல்றாங்க. இந்தப் பிரச்னை இப்போ பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிச்சிருக்கு’’ என்றார், வாத்தியார்.
அடுத்த செய்தியை ஆரம்பித்த காய்கறி, ``ஆவின் பாலில் குளோரின், பிளாஸ்டிக் மற்றும் மருந்து வாடை வீசுறதா சமீபத்தில்தான் பிரச்னை கிளம்புச்சு. இந்த நிலையில், கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், `ஆவின் பாலில் மரவள்ளிக்கிழங்கு மாவையும் ரசாயனப் பொருளையும் கலக்குறாங்க. இந்தப் பாலைக் குடிச்சா உடலுக்குப் பாதிப்புகள் ஏற்படும்'னு சொல்லி, போராட்டம் நடத்தியிருக்காங்க. `இந்த விஷயத்தைத் தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு போயும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படலை'னு அந்த சங்கத்து நிர்வாகிகள் சொல்றாங்க. உடனே, தமிழக அரசு முறையான ஆய்வு நடத்தி, தவறு செய்ற அதிகாரிகளைக் கடுமையா தண்டிக்கணும்கிறதுதான் எல்லோருக்குமான எதிர்பார்ப்பு’’ என்றார், காய்கறி.
``ஆவினிலேயே இன்னொரு பிரச்னையும் சொன்னாங்க’’ என்ற வாத்தியார், ``தமிழ்நாட்டில் ஆவினுக்கான பால் பாக்கெட் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாலித்தீன் பிலிம் ரோல்களை, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருக்கிற ஒரு தனியார் நிறுவனத்திலிருந்துதான் வாங்குறாங்களாம். அப்படி மதுரை ஆவின் மண்டலத்துக்கு வந்த 160 பிலிம் ரோல்களில் ரசாயன நெடி வீசினதா சொல்லப்படுது. உடனே, அந்த பாலித்தீன் ரோல்களை மதுரை மண்டல உயரதிகாரிகள், திருப்பி அனுப்பிட்டாங்களாம். ஆனா, மற்ற மண்டலங்களில் என்ன நடந்துச்சுனு தெரியலையாம். ஆவின் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினால் இன்னும் பல பூதங்கள் வெளியில் வரும்போல’' என்றார்.
``எனக்கு வேலையிருக்கு, தண்ணியை அடுத்த வாய்க்காலுக்கு மடை மாத்திவிடணும்’’ என்று சொல்லிக் கொண்டே மண் வெட்டியை எடுத்துக் கொண்டு ஏரோட்டி செல்ல, அத்தோடு முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.