📅 Tuesday, 01 September 2026 IST | ஆவணி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 01, 2026 08:04 PM

ஆயுள் அதிகரிப்பதால் ஓய்வுக்காலச் சேமிப்பு போதவில்லை

ஆயுள் அதிகரிப்பதால் ஓய்வுக்காலச் சேமிப்பு போதவில்லை

சிங்கப்பூர் மக்களின் ஆயுட்காலம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

ஆனால், பலர் தங்களின் நீண்ட ஓய்வுகாலத்திற்குத் திட்டமிடத் தவறிவிடுகின்றனர்.

இதனால், அவர்களின் நிதி ஆதாரம் போதுமானதாக இல்லாமல் போகும் அபாயம் உருவாகிறது.

“ஓய்வுகாலத்திற்குப் பிறகு, வாழ்க்கை 15 அல்லது 20 ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் அதைவிட அதிக காலம் வாழ்ந்தால் என்னவாகும்,” என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயல்படும் டிஐஏஏ என்ற அமைப்பின் தலைவரான சூர்யா கொல்லூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

“கூடுதல் ஆண்டுகளுக்கான வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க அவர்களிடம் போதுமான சேமிப்பு இருக்குமா? அவர்களின் ஆரோக்கிய நிலை என்னவாகும்? கூடுதல் மருத்துவச் செலவுகள் ஏற்பட்டால் என்ன செய்வது.” என்றும் அவர் வினவினார்.

‘டிஐஏஏ இன்ஸ்டிடியூட்’, ‘குளோபல் ஃபைனான்ஷியல் லிட்டரசி எக்ஸலன்ஸ் சென்டர்’ ஆகியவை இணைந்து கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட புதிய ஆய்வில் அமெரிக்காவில் 65 வயதை எட்டும் பெரியவர்களில் 32 விழுக்காட்டினர் தங்களின் மீதமுள்ள ஆயுட்காலத்தைக் குறைவாகக் கணித்துள்ளது தெரியவந்துள்ளது.

அதேவேளையில், 33 விழுக்காட்டினர் தங்களின் ஆயுட்காலத்தைச் சரியாகக் கணித்துள்ளனர்; 13 விழுக்காட்டினர் அதிகமாகக் கணித்துள்ளனர்; 22 விழுக்காட்டினருக்குத் தங்களின் ஆயுட்காலம் குறித்து எதுவும் தெரியவில்லை.

சிங்கப்பூரர்கள் பிறப்பின் அடிப்படையிலான சராசரி ஆயுட்காலமான 83.9 ஆண்டுகளை மட்டுமே கணக்கில் கொண்டு திட்டமிட்டால், தங்களின் சேமிப்பைத் தாண்டி அதிக காலம் வாழும்போது நிதி நெருக்கடியைச் சந்திக்கும் உண்மையான அபாயம் உள்ளது என்று லீ குவான் இயூ பொதுக் கொள்கைப் பள்ளியின் இணைப் பேராசிரியர் ஜோயல் ஃபோங் எச்சரித்துள்ளார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

ஓய்வுபெறும் வயதான 65ல் ஒருவருக்கு மீதமுள்ள ஆயுட்காலத்தையே, அவரின் சேமிப்பு எவ்வளவு காலம் நீடிக்க வேண்டும் என்பதைக் கணக்கிடுவதற்கான அடிப்படை அளவுகோலாக ஓய்வுகால நிபுணர்கள் பயன்படுத்துகின்றனர்.

புள்ளிவிவரத் துறையின் அண்மைத் தரவுகளின்படி, 65 வயதை எட்டும் சிங்கப்பூர்வாசிகளின் சராசரி ஆயுட்காலம் 86.6 ஆண்டுகளாகும். இதில் ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 84.9 ஆண்டுகள்; பெண்களின் சராசரி ஆயுட்காலம் 88.1 ஆண்டுகள் ஆகும்.

‘மேனுலைஃப்’ நிறுவனம் கடந்த ஜூன் மாதம் நடத்திய ஆய்வில், இங்குள்ளவர்கள் பதிலளித்ததில் 78 விழுக்காட்டினர் தங்களின் சேமிப்பு முடிந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், 70 விழுக்காட்டினர் தங்களின் எதிர்காலப் பராமரிப்புச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் போகுமோ என்று அஞ்சுகின்றனர்.

கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 18, அதற்கு மேற்பட்ட வயதுடைய 1,074 சிங்கப்பூரர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 46 விழுக்காட்டினர் குடும்ப உறுப்பினர்களைப் பராமரிக்கும் நிதிப் பொறுப்பைக் கொண்டுள்ளனர்.

இந்தக் குழுவில் 62 விழுக்காட்டினர் குடும்ப நிதிப் பொறுப்புகள் தங்களின் நீண்டகால நிதித் தயார்நிலையை அடைவதில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரின் தேசிய ஆயுட்காலக் காப்பீட்டுத் திட்டமான ‘சிபிஎஃப் லைஃப்’ ஓய்வுகாலச் சேமிப்பைத் தாண்டி வாழும் அபாயத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கிறது.

இந்த ஆயுட்காலச் சந்தா திட்டத்தின்கீழ், மத்திய சேம நிதி உறுப்பினர்கள் தங்களின் 65 முதல் 70 வயதிற்குள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் தொடக்க வயதிலிருந்து, உயிருடன் இருக்கும் வரை மாதந்தோறும் ஒரு தொகையைப் பெறுகின்றனர்.

அவர்கள் முதல் மாதத் தொகையைப் பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அவர்களின் ஓய்வுகாலக் கணக்கிலிருந்து காப்பீட்டுக் கட்டணம் பிடிக்கப்படுகிறது.

சிங்கப்பூர் கூட்டாகப் பொறுப்பு வகிப்பதன் மூலமே மிக நீண்ட காலம் வாழும் அபாயத்தைச் சமாளிக்கிறது என்று பேராசிரியர் ஃபோங் சுட்டிக்காட்டினார்.

சந்தா தொகையை ஒன்றுதிரட்டுவதால் அனைத்து குடிமக்களும் ஒரே பெரிய குழுவாக இந்த அபாயத்தைப் பகிர்ந்துகொள்கின்றனர் என்று அவர் கூறினார்.

“நாம் 120 வயது வரை வாழப்போகிறோமா அல்லது 70 வயது வரை வாழப்போகும் நபரா என்பதைப் பொருட்படுத்தாமல் நாம் அனைவரும் இந்த அபாயப் பகிர்வுக் குழுவில் இணைந்துள்ளோம்,” என்று அவர் மேலும் தெரவித்தார்.