📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion October 16, 2026 07:03 PM

ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை எதிரொலி: விமானம், பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு

ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை எதிரொலி: விமானம், பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு

ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை எதிரொலி: விமானம், பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு

சாதாரண நாட்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட தற்போது பல வழித்தடங்களில் இரண்டு முதல் நான்கு மடங்கு வரை கட்டணம் உயர்ந்திருப்பது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published : October 16, 2026 at 4:09 PM IST

சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணமும், தனியார் பேருந்து கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

வரும் அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளின் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னர் சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களுடன் சேர்ந்து, தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் வசிக்கும் மக்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு செல்லவும், சுற்றுலாத் தலங்களுக்கு சென்று விடுமுறையை கழிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இதன் காரணமாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே விரைவாக பயணம் மேற்கொள்ள விரும்பும் பலரும் விமானப் பயணத்தைத் தேர்வு செய்வதால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலும் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளன. குறிப்பாக சென்னையில் இருந்து தூத்துக்குடி, கோவை, சேலம், திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், விஜயவாடா, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல சாதாரண நாட்களில் ரூ. 7,201 ஆக இருக்கும் விமானக் கட்டணம், தற்போது ரூ. 17,363 ஆக உயர்ந்துள்ளது.

கோவைக்கு செல்லும் விமானக் கட்டணம் ரூ. 5,373-ல் இருந்து ரூ. 16,601 ஆகவும், திருவனந்தபுரத்துக்கான கட்டணம் ரூ. 6,745-ல் இருந்து ரூ. 20,448 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேபோல், கொச்சிக்கு செல்லும் விமானக் கட்டணம் ரூ. 5,986-ல் இருந்து ரூ. 18,255 ஆகவும், பெங்களூருக்கான கட்டணம் ரூ. 4,474-ல் இருந்து ரூ. 18,041 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஹைதராபாத் செல்ல சாதாரண நாட்களில் ரூ. 4,467 ஆக இருக்கும் கட்டணம், தற்போது ரூ. 21,665 ஆக அதிகரித்துள்ளது. விஜயவாடாவுக்கான கட்டணம் ரூ. 5,272-ல் இருந்து ரூ. 14,344 ஆக உயர்ந்துள்ளது. மும்பைக்கு செல்லும் விமானக் கட்டணம் ரூ. 6,469-ல் இருந்து ரூ. 22,353 ஆகவும், டெல்லிக்கான கட்டணம் ரூ. 9,208-ல் இருந்து ரூ. 23,099 ஆகவும் அதிகரித்துள்ளது.

கொல்கத்தாவுக்கான விமானக் கட்டணம் ரூ. 8,219-ல் இருந்து ரூ. 17,625 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான மதுரை, திருச்சிக்கான விமானக் கட்டணங்களும் அதிகரித்துள்ளன. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் கட்டணம் ரூ. 5,459-ல் இருந்து ரூ. 8,537 ஆகவும், திருச்சிக்கான கட்டணம் ரூ. 5,066-ல் இருந்து ரூ. 9,896 ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலும், சென்னையில் இருந்து சேலத்துக்கு நேரடி விமானத்தில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் கிடைக்காததால், பெங்களூரு வழியாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பயணத்துக்கான கட்டணம் ரூ. 12,237 கொடுத்து பயணிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

பண்டிகை காலங்களில் விமானக் கட்டணங்கள் உயர்த்தப்படுவது தொடர்பாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான டிஜிசிஏ உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும், பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கட்டண உயர்வைக் கண்காணிக்க வேண்டும் என்றும் பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

தனியார் பேருந்து கட்டணம் உயர்வு

அதே போன்று, தனியார் பேருந்து கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல ஏசி அல்லாத சாதாரண இருக்கை பேருந்தின் டிக்கெட் கட்டணம் ரூ. 2,250 முதல் என முன்பதிவு தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும், சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்ல அதிகபடியாக ரூ. 3,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.