‘ஐ.நா. மாநாட்டில் ஒலித்த தமிழ் குரல்’ - நிலையான வளர்ச்சி; நீடித்த நல்வாழ்வு
ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான இரண்டாவது உலக உச்சி மாநாடு 2026-இல் ஒரு தமிழரின் குரலாக டிஏசி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராகச் செயல்படும் டாக்டர் சதீஷ் குமார் சந்தானத்தின் குரல் ஒலித்துள்ளது.
டாக்டர் சதீஷ் குமார் சந்தானம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிலைத்தன்மை, மனித நல்வாழ்வு மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான உலகளாவிய உரையாடல்களில் தமிழர்களின் பார்வையை முன்னிறுத்தியவர். 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையான சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கான இரண்டாவது உலக உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றது, உலகளாவிய தளத்தில் இத்தகைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது.
ஐ.நா.சபையின் இரண்டாவது உச்சி மாநாட்டில் டாக்டர் சதீஷ் குமார் சந்தானம் தமிழர் பாரம்பரியம், கல்லணை மற்றும் தஞ்சைப் பெரிய கோயிலின் பொறியியல் சிறப்பு, எதிர்காலத்திற்கான நிலையான வாழ்விடங்கள் குறித்துப் பேசினார்.
உலகளவில் நிலையான வளர்ச்சி, அனைவருக்கும் தரமான சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனித நல்வாழ்வு ஆகியவை முக்கிய விவாதப் பொருள்களாக மாறிவரும் நிலையில், பாரம்பரிய அறிவையும் நவீனத் தொழில்நுட்பத்தையும் இணைத்துச் சிந்திப்பது அவசியமாகியுள்ளது. இந்தப் பின்னணியில், தாய்மொழி, பண்பாடு, பொறியியல் மரபு மற்றும் எதிர்காலத் தலைமுறைகளுக்கான நிலையான வாழ்விடங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி டாக்டர் சதீஷ் குமார் சந்தானம் ஆற்றிய உரை கவனம் பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாங்காக் மாநாட்டு மையத்தில் 2026 செப்டம்பர் 25-ஆம் தேதி நடைபெற்ற நிலையான சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கான இரண்டாவது உலக உச்சி மாநாட்டில் (Second World Summit on Sustainable Health and Well-Being 2026), டிஏசி டெவலப்பர்ஸ் (DAC Developers) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான டாக்டர் சதீஷ் குமார் சந்தானம், “நமது வேர்களிலிருந்து எதிர்காலத்தை நோக்கி: தலைமுறைகளுக்கான கட்டமைப்பை உருவாக்குதல்” (From Our Roots to Our Future: Building for Generations) என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த மாநாடு உலகளாவிய சுகாதாரம், சமத்துவம், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த கருத்துப் பரிமாற்றத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. தனது உரையில்,
தமிழகத்தின் தொன்மையான பொறியியல் மற்றும் கட்டிடக்கலைச் சாதனைகளை எடுத்துரைத்த அவர், பல நூற்றாண்டுகளைக் கடந்தும் மனிதகுலத்துக்குப் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள், தொலைநோக்குச் சிந்தனையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகக் குறிப்பிட்டார்.
தமிழர் பண்பாட்டின் உலகளாவிய மனிதநேயச் சிந்தனையை எடுத்துரைக்கும் வகையில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டிய “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் சங்க இலக்கிய வரிகளையும் தனது உரையில் நினைவுகூர்ந்தார்.
எதிர்காலத்திற்கான வாழ்விடங்களை உருவாக்குவதில் நீர்ப் பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, நவீனத் தொழில்நுட்பம், இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை, மக்களால் வாங்கக்கூடிய விலையில் வீடுகள் மற்றும் மனிதர்களிடையேயான சமூக உறவுகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும், என்றும் அவர் வலியுறுத்தினார்.
மனிதர்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதில் மருத்துவ அறிவியல் மட்டும் போதுமானதல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய அவர்,
மக்கள் வாழும் வீடுகள், குடியிருப்புகள், நகரங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழல் ஆகியவை உடல்நலம், மனநலம், பாதுகாப்பு மற்றும் சமூக நல்வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதே அவரது உரையின் மையக் கருத்தாக அமைந்தது.
கட்டுமானத் துறையின் வளர்ச்சியைத் தாண்டி, சமூகத்தை வலுப்படுத்தும், அனைவரையும் உள்ளடக்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நீண்டகாலப் பயனளிக்கும் சமூகங்களை உருவாக்குவதே எதிர்கால நோக்கமாக இருக்க வேண்டும் என்பதைத் தனது உரையில் எடுத்துரைத்தார்.
தமிழர்களின் தொன்மையான பொறியியல் அறிவு, பண்பாட்டுப் பாரம்பரியம் மற்றும் மனிதநேயச் சிந்தனைகளை நவீன உலகின் நிலையான வளர்ச்சித் தேவைகளுடன் இணைத்த அவரது உரை, கடந்த காலத்தின் அறிவை எதிர்காலத் தலைமுறைகளின் நல்வாழ்வுக்குப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைந்தது.