அகர்கர் கண் முன்னே செஞ்சுரி அடித்துக் காட்டிய இஷான் கிஷன்.. டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு
அகர்கர் கண் முன்னே செஞ்சுரி அடித்துக் காட்டிய இஷான் கிஷன்.. டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு
சென்னை: இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பிடிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன், துலீப் டிராபி இறுதிப் போட்டியில் சதம் விளாசித் தனது திறமையை நிரூபித்துள்ளார். பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் சேப்பாக்கம் மைதானத்தின் கேலரியில் அமர்ந்து ஆட்டத்தை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்த போதே, கிழக்கு மண்டல அணியின் கேப்டனான இஷான் கிஷன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
தென் மண்டல அணிக்கு எதிரான இறுதிப் போட்டியின் முதல் நாளில், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இவரது இன்னிங்சில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும். 71 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், பின்னர் தனது ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்து பவுண்டரிகளாக விளாசினார். முகமது சிராஜ், மிலிந்த் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளைச் சிதறடித்தார். இது அவரது கேரியரில் 2-வது துலீப் டிராபி சதமாகும்.
முன்னதாக, 4 விக்கெட்டுகளை இழந்து கிழக்கு மண்டல அணி தவித்த போது, இஷான் கிஷன் மற்றும் குமார் குஷாக்ரா ஜோடி இணைந்து 5-வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 144 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கிழக்கு மண்டல அணி 79 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. சமீபத்தில் கவுண்டி கிரிக்கெட்டிலும் நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக விளையாடி 87 மற்றும் 77 ரன்கள் அடித்து இஷான் கிஷன் அசத்தியிருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஷான் கிஷனின் செயல்பாடு குறித்துப் பேசியிருந்த அஜித் அகர்கர், அவர் தொடர்ந்து உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்குச் சான்றாக தற்போது அகர்கர் முன்னிலையிலேயே இஷான் கிஷன் இந்த சதத்தை அடித்துள்ளார். நியூசிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்கள் நெருங்கி வரும் வேளையில், இஷான் கிஷனின் இந்த சதம் அவரது டெஸ்ட் வாய்ப்பை மேலும் அதிகரித்து உள்ளது.