அமைச்சர் நிர்மல் குமார் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை கோரி பேரவைத் தலைவரிடம் திமுக மனு
அமைச்சர் நிர்மல் குமார் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை கோரி பேரவைத் தலைவரிடம் திமுக மனு
"அவையில் இல்லாத நபர்கள் குறித்து விவாதிப்பது, அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சட்டப்பேரவை விதிகளுக்கும் மரபுகளுக்கும் எதிரானது" என்று திமுக கொறடா எ.வ.வேலு உள்ளிட்டோர் தெரிவித்தனர்
Published : September 15, 2026 at 10:25 PM IST
சென்னை: அவையில் இல்லாதவர்கள் குறித்து பேசியதாக, அமைச்சர் நிர்மல் குமார் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டப்பேரவைத் தலைவரிடம் திமுக மனு அளித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் மற்றும் பேரவைத் தலைவர் ஆகியோரை திமுக கொறடா எ.வ.வேலு, சட்டமன்ற உறுப்பினர்களான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வசந்தம் கார்த்திகேயன், ராஜா, காதர்பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் இன்று சந்தித்தனர்.
அதனைத் தொடர்ந்து, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், "சட்டப்பேரவையில் இல்லாத தலைவர்கள் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்ததாக, சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக் கோரி பேரவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளோம்.
அவையில் இல்லாத நபர்கள் குறித்து விவாதிப்பது அல்லது அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சட்டப்பேரவை விதிகளுக்கும் மரபுகளுக்கும் எதிரானது.
அவையில் உள்ள ஒரு உறுப்பினர் குறித்து பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், அதுதொடர்பான விவரங்களை முன்கூட்டியே பேரவைத் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு தெரிவிக்க வேண்டும் என சட்டப்பேரவை விதிகள் கூறுகின்றன.
ஆனால், எந்தவித முன் தகவலும் அளிக்காமல் விதிகளை மீறி கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவைத் தலைவரிடம் வலியுறுத்தி இருக்கிறோம்.
இதேபோல் முதல்வர் குறித்தும் அவை உரிமை மீறல் புகார் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் நிலவும் பாலியல் வன்முறைகள், காவல் மரணங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, அதற்கு உரிய பதில் அளிப்பதற்கு பதிலாக சர்க்காரியா கமிஷன், மிசா உள்ளிட்ட பழைய விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இதுபோன்ற விவாதங்கள் மூலம் முக்கியப் பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சி நடைபெறுகிறது. பல முறை விவாதிக்கப்பட்ட விவகாரம் குறித்து அவர்கள் பேசுகின்றனர். மிசா காலத்தில் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின், வீரமணி, கம்யூனிஸ்ட் தோழர்கள் உள்ளிட்ட 419-க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனுபவித்த துன்பங்களை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துகள் தெரிவிக்கக் கூடாது.
சட்டப்பேரவை அவைக்குறிப்பில் தேவையற்ற அல்லது விதிகளுக்கு மாறாக இடம்பெற்றுள்ள பேச்சுகளை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இந்த விவகாரம் தொடர்பாக, துணைச் சபாநாயகர் தலைமையிலான சட்டமன்ற உரிமைக் குழு மனுக்களை ஆய்வு செய்து, இரு தரப்பினருக்கும் வாய்ப்பு அளித்து விசாரணை நடத்தும். அதன் பின்னர் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பேரவைத் தலைவர் உரிய முடிவு எடுப்பார்" என்று அவர்கள் தெரிவித்தனர்.