அபிஷேக் சர்மா மரண அடி.. 26 பந்துகளில் 7 சிக்ஸ், 6 ஃபோர்.. ஷேர்
அபிஷேக் சர்மா மரண அடி.. 26 பந்துகளில் 7 சிக்ஸ், 6 ஃபோர்.. ஷேர்-இ-பஞ்சாப் டி20 தொடரில் சரவெடி
மொஹாலி: ஷேர்-இ-பஞ்சாப் டி20 லீக் தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா 26 பந்துகளில் 77 ரன்கள் குவித்து ருத்ரதாண்டவம் ஆடினார். மொஹாலியில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 30) தொடங்கிய ஷேர்-இ-பஞ்சாப் டி20 லீக் தொடரின் முதல் போட்டியில், அமிர்தசரஸ் சூர்மாஸ் மற்றும் மொஹாலி கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் அமிர்தசரஸ் அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கிய அபிஷேக் சர்மா, வெறும் 26 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் விளாசினார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 296.17 ஆக இருந்தது. இவரது அதிரடியால் அமிர்தசரஸ் அணி 19.5 ஓவர்களில் 258 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. மற்ற வீரர்களான சஹாஜ் தவான் 45 ரன்களும், நமன் திர் 47 ரன்களும் எடுத்தனர்.
எனினும், 259 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய மொஹாலி கிங்ஸ் அணி, 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் அன்மோல்ப்ரீத் சிங் 51 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களுடன் 133 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். கேப்டன் ரமன்தீப் சிங் 40 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பேட்டிங்கை தொடர்ந்து பந்துவீச்சிலும் பங்களித்த அபிஷேக் சர்மா, 2.3 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அமிர்தசரஸ் அணி தனது அடுத்த போட்டியில் செப்டம்பர் 1 அன்று ஜலந்தர் வாரியர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதற்கிடையே, இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான பாசில்கா ஃபால்கன்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஜலந்தர் வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
சமீப காலமாக சர்வதேச டி20 தொடரில் அபிஷேக் சர்மா சொதப்பி வரும் நிலையில் இந்த அதிரடி ஆட்டம் கவனம் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு முன்னதாக இந்திய அணியில் தனது இடத்தை தக்க வைக்க இந்த அதிரடி ஆட்டம் அவருக்கு உதவும்.