📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 22, 2026 01:03 PM

அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வார்டு தயார்! பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரை

அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வார்டு தயார்! பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், காய்ச்சல், டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க, 50 படுக்கை வசதிகளுடன் காய்ச்சல் வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகரம் மற்றம் சுற்றுப்பகுதிகளில், மழை மற்றும் வெயில் என சீதோஷ்ண நிலை மாறி மாறி வருவதால், வைரஸ், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதையடுத்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதில், நகராட்சி சுகாதாரப்பணியாளர்கள், டெங்கு தடுப்பு பணியாளர்கள் வாயிலாக வீடு, வீடாக சென்று கண்காணிப்பு செய்து, உரிய பாதுகாப்பு அறிவுரைகளை வழங்குகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் வைரஸ், டெங்கு காய்ச்சல் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. டாக்டர் வனஜா தலைமையிலான குழுவினர், சிகிச்சை அளித்து வருகின்றனர். வார்டில், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுமதி ஆய்வு செய்தார். சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா என கண்காணித்து, டாக்டர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், 50 படுக்கை வசதிகளுடன் காய்ச்சல் வார்டு துவங்கப்பட்டுள்ளன. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து டாக்டர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டது.

மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா கூறியதாவது:

மருத்துவமனையில் வைரஸ், டெங்கு காய்ச்சலால் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மழை நீரில் உற்பத்தியாகும் 'ஏடிஎஸ்' கொசு கடிக்கும் போது, டெங்கு காய்ச்சல் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதனால், பொதுமக்கள் தங்களுடைய வீடு மற்றும் அருகில் மழைநீர் தேங்கி இருந்தால் அதை வெளியேற்ற வேண்டும். பூத்தொட்டிகள், தேங்காய் சிரட்டை, பழைய டயர் போன்றவற்றில் மழைநீர் தேங்கி நிற்காமல் பராமரிக்க வேண்டும்.

குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிப்பது மற்றும் துாங்குமிடத்தில் கொசுவலை உபயோகப்படுத்துவது போன்ற முன்னேற்பாடுகளால் கொசுக்கடியில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

காய்ச்சல் மற்றும் அதிக உடல் சோர்வு இருந்தால், சுயமாக சிகிச்சை எடுத்துக்கொள்வதை தவிர்த்து மருத்துவரை பார்த்து, தேவைப்பட்டால் ரத்த பரிசோதனை செய்து முழுமையாக சிகிச்சை பெற வேண்டும்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அலட்சியமாக இல்லாமல் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும். பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து, டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினார்.