📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 30, 2026 01:05 PM

அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம்; ஆண்கள் லிஸ்டில் இல்லையா.? நிருபரின் கேள்விக்கு அமைச்சர் நகைச்சுவை பதில்

அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம்; ஆண்கள் லிஸ்டில் இல்லையா.? நிருபரின் கேள்விக்கு அமைச்சர் நகைச்சுவை பதில்

அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம்; ஆண்கள் லிஸ்டில் இல்லையா? என்ற நிருபரின் கேள்விக்கு போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் நகைச்சுவையாக பதில் அளித்தார்.

நாமக்கல் சென்றிருந்த போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம், நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அமைச்சரும் அதற்கு பதில் அளித்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு நிருபர், "அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை விரிவுபடுத்தி இருக்கிறீர்கள். ஆண்கள் அந்த லிஸ்டில் இல்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் தமிழன் பார்த்திபன், சுதாரித்துக்கொண்டு நகைச்சுவையாக பதில் அளித்தார். அதாவது, "நீங்கள் என் அண்ணன் என்று வைத்துக்கொள்ளுங்களேன். என் தங்கையை உங்களுக்கு கொடுத்திருக்கிறேன் (திருமணம் செய்து வைத்திருக்கிறேன்) என்றால், என் மச்சான் கிட்ட தங்கச்சி பணம் கேட்கக்கூடாது என்பதற்காக, உங்களை தொந்தரவு பண்ணக்கூடாது என்பதற்காக இலவசமாக விட்டுள்ளோம். உங்கள் பணத்தைதான் மிச்சம் பண்ணி கொடுத்திருக்கிறோம்" என்றார்.

அமைச்சரின் இந்த வித்தியாசமான பதில், நிருபரை சற்று குழப்பம் அடையச் செய்தாலும், அங்கிருந்தவர்கள் சிரிக்கும் வகையில் அமைந்தது.