📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 13, 2026 06:02 PM

”அவர் நிர்மல்குமார் இல்ல, கலெக்ஷன் குமார்…”

”அவர் நிர்மல்குமார் இல்ல, கலெக்ஷன் குமார்…”

"அவர் நிர்மல்குமார் இல்ல, கலெக்ஷன் குமார்…" – அமைச்சரை கிழித்தெடுத்த செந்தில்பாலாஜி..!

தவெக ஆட்சியில் ரூ.35-க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமாரை சரமாரியான கேள்விகளால் சாடியுள்ளார் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.

தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, மிக முக்கியமான பிரச்னையாக மின்வெட்டு இருந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பலரும் பாதித்து வரும் நிலையில், மக்கள் எல்லோரும் ஆங்காங்கே தெருக்களில் வந்து போராட்டத்தினை நடத்தும் சூழ்நிலைக்கு தமிழ்நாட்டு மக்கள் தள்ளப்பட்டு வருகின்றனர்.

இப்படி பல்வேறு இடங்களில் தொடர்ந்து வரும் மின்வெட்டு நேற்று(அக்.,12) தலைமைச் செயலகத்தையே இருளில் மூழ்கும் நிலை உருவானது. இந்த திடீர் மின்வெட்டால் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் முதல் தளத்தில் உள்ள அமைச்சர்கள் அறைகள் என்று சுமார் அரை மணி நேரமாக இருளில் மூழ்கி கிடந்தன.

இதற்கெல்லாம் தமிழ்நாடு அரசு சார்பில் எந்தவொரு முறையான விளக்கமும் கொடுக்கப்படாத நிலையில், தற்போது 24 மணி நேரமும் வாங்கப்பட உள்ள மின்சாரத்தை யூனிட் 31.99 ரூபாய் முதல் 34.49 ரூபாய் வரையிலான விலையில் கொள்முதல் செய்வதற்கு ஐந்து நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு.

மாலை முதல் நள்ளிரவு வரை 3,000 மெகாவாட் மின்சாரம் வாங்க டெண்டர் கோரியதில் 2000 மெகாவாட் கிடைத்துள்ளது. மின்சாரம் யூனிட் 33.37 ரூபாய் முதல் 37 ரூபாய் வரை வாங்கப்பட உள்ளது. இவ்வளவு அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில், ஒரு யூனிட்டுக்கு 35 ரூபா? என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

அந்தவகையில், இவ்விவகாரம் தொடர்பாக, தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமாரை, முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரான செந்தில்பாலாஜி சரமாரியான கேள்விகளால் கிழித்தெடுத்துள்ளார்.

அதாவது, தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சிப்பொறுப்பேற்று 5 மாதங்களாகியும், மின்வெட்டு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தமிழ்நாட்டின் சொந்த மின் உற்பத்திய குறைத்து வெளிச்சந்தையில் கொள்முதல் செய்வதற்கான முன்னெடுப்புகளை எடுத்துள்ளார் அமைச்சர் நிர்மல் குமார் என்றும் கூறிய செந்தில்பாலாஜி, 5 மாதங்களாக டெண்டர் போடாமல் 5 நாட்களில் அவசரகதியில் ரூ.35-க்கு மின்சாரத்தை கொள்முதல் செய்வது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, வெளிச்சந்தையில் யூனிட்டிற்கு ரூ35-க்கு கொள்முதல் செய்வது, மின்துறையின் ஒட்டுமொத்த நிதிநிலையை சீரழித்துவிடும் என்று எச்சரித்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ”2021ம் ஆண்டுல, ரூ.20-க்கு மின்சாரம் கொள்முதல் செய்தபோது Resign EB Minister-னு பதிவு போட்டாரு இன்றைய மின் துறை அமைச்சர். இன்னைக்கு அவரே ரூ.35-க்கு கொள்முதல் பண்றாரு. இப்ப என்ன பண்ண போறாரு?” என்று கேள்வி எழுப்பியதோடு, “அவர் நிர்மல் குமார் இல்லை… கலெஷன் குமார்” என்று விமர்சித்துள்ளார்.

மேலும், “த.வெ.க சொந்த உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம். ஏன் அமைச்சர் நிகழ்வுகள், பட்டமளிப்பு விழா என அனைத்து இடத்திலும் சிக்கல் இருக்கிறது. ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் அமைச்சர் சரியான பதில் அளிக்க வேண்டும்.

மின்துறை அதிகாரிகள், ஊழியர்கள் சிறப்பாக செயல்படுபவர்கள் தான். மழை, புயல் நேரத்தில் பாதிப்பு இல்லாமல் பணிகளை முடித்து கொடுப்பார்கள். ஆனால் இப்போது அமைச்சர் அவர்களை விமர்சனம் செய்வது ஏற்க கூடியதாக இல்லை. மின் வெட்டுக்கு திமுக மீது விமர்சனம் சொல்ல வேண்டும் என நோக்கில் செயல்படுகின்றனர். கரூர் மாவட்டம் வந்தபோது அப்போது பாடல் பாடினார் விஜய். இப்போ ஒரு யூனிட் 35 ரூபாய் என CM bro பாடல் பாடுவாரா?” என்று முதலமைச்சர் குறித்தும் விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி.