📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 12, 2026 07:32 AM

‘சாலமன் பாப்பையா... மாபெரும் தமிழ் ஆளுமை!’

‘சாலமன் பாப்பையா... மாபெரும் தமிழ் ஆளுமை!’

‘அருமை தாய்மார்களே’ என பட்டிமன்ற மேடைகளிலும், ‘வாங்க பழகலாம்’ என சினிமாவிலும் இழுத்து மொழியும் தன் மதுரை தமிழால் தனி முத்திரைப் பதித்தவர் பட்டிமன்ற நடுவர், பேராசிரியர் சாலமன் பாப்பையா. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில், ‘படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. வெளியிட்டுள்ள பதிவில், ‘பழந்தமிழ் இலக்கியங்களைப் பாமர மொழியில் விளக்குவது தனித்த ஒரு கலை. அந்தத் திறமையை, பட்டிமன்றம் என்ற வடிவத்தின் மூலம் நிலைநாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்தார்.

நிறைவாழ்வில் பெருஞ்செயல் செய்து காலம் சென்றிருக்கும் அவரது புகழ் நிலைத்திருக்கும். அவர்தம் குடும்பத்தினருக்கும், தங்கள் ஆசிரியரை இழந்து வாடும் மாணாக்கர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

சரத்குமார்: ‘அன்புப் பெரியோர்களே… அருமைத் தாய்மார்களே… இனிய குழந்தைகளே…” என்ற அன்பான குரலின் வாயிலாக தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நுழைந்து, தனது இனிய பேச்சாலும், நகைச்சுவை கலந்த நயமான தமிழாலும், பட்டிமன்ற மேடைகளைப் பண்பாட்டின் பெருமைமிக்க அரங்குகளாக மாற்றிய பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

தமிழ் மொழிக்கும், இலக்கிய, இலக்கண வளர்ச்சிக்கும் அவரது அர்ப்பணிப்பு அளப்பரியது. தமிழறிஞரின் மறைவு உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு மிகுந்த பேரிழப்பு.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் புகழும், தமிழுக்கான அவரது பங்களிப்பும் என்றும் நிலைத்திருக்கும். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி தனது புகழஞ்சலியில், ‘தமிழ் மேடையின் ஒரு பொற்காலம் மறைந்தது. பட்டிமன்றத்தை வீடு வீடாக கொண்டு சென்ற, தமிழை எளிமையாக, அழகாக பேசி புரிய வைத்த சாலமன் பாப்பையா மறைவு தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு.

அவரது சொற்கள் வழி வழியாக தமிழுக்குள் வாழும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் ராமராஜன்: ‘தமிழ் இலக்கிய பேச்சை தரணியெங்கும் கொண்டுச்சேர்த்த மூத்த தமிழறிஞர்,பரணி போற்றும் பேச்சாற்றல் கொண்ட பல்சுவை வித்தகரான ஐயாவின் மறைவு ஆறுதல் அடைய முடியாதது. அவரின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்: ‘சிறு வயது முதல் உங்கள் குரல் இல்லாத பண்டிகை நாட்கள் இல்லை. என் கல்லூரி காலங்களில் உங்கள் குரல் இல்லாமல் நான் மேடை ஏறியதில்லை. “அன்பு பெரியோர்களே” என்று உங்கள் குரலில் நான் மேடையில் பேச ஆரம்பிக்கும்போதெல்லாம் ஆர்ப்பரித்த இந்தத் தமிழ் சமூகத்தில், உங்கள் பேச்சாலும் தமிழாலும் நீங்கள் என்றும் எங்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள், ஐயா. உங்களின் பலகோடி ரசிகர்களில் ஒருவனாக எனது புகழஞ்சலி’ என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சங்கர்: ‘மதிப்பிற்குரிய சாலமன் பாப்பையா மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரடைந்தேன். எத்தகைய தமிழ் அறிஞராகவும், பேச்சாளராகவும் அவர் திகழ்ந்தார். ஒவ்வொரு தமிழ் விழா காலங்களிலும் அவரது பட்டிமன்றத்தைக் காண நான் ஆவலுடன் காத்திருப்பேன். ரசிப்பேன்.

அவரின் அருமையான நகைச்சுவையுணர்வு, கூர்மையான சொல்லாற்றல், மதிநுட்பமான தீர்ப்புகளை இனி காண முடியாது என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழ் மொழி, கலாச்சாரத்துக்கு அவரின் பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

சன் தொலைக்காட்சி: சன் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழின் குரலாய், பட்டிமன்றத்தின் அடையாளமாய் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது தமிழும், தனித்துவமான பேச்சும் என்றும் நம் நினைவுகளில் வாழும்’ எனத் தெரிவித்துள்ளது.

ஏவிஎம் புரொடக்‌ஷன்: ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில்,‘பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா மறைவு குறித்து நாங்கள் மிகவும் துயரடைகிறோம். சிறந்த தமிழ் அறிஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான அவர், தன் நகைச்சுவையுணர்வு, தமிழ் மொழி மீது கொண்ட பற்று ஆகியவைகளால் பல தலைமுறைகளின் மனங்களை வென்ற ஆளுமை அவர். ‘சிவாஜி’ திரைப்பத்தின் மூலம் அவருடன் ஏற்பட்ட பிணைப்பையும், அப்படத்துக்கு அவர் அளித்த தனித்துவமான பங்களிப்பையும் நினைவுகூர்கிறோம். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.

சிவகார்த்திக்கேயன் புரொடக்‌ஷன்ஸ்: ‘புகழ்பெற்ற தமிழ் அறிஞரும், பேச்சாளரமான சாலமன் பாப்பையா மறைவு கண்டு மிகவும் துயரம் அடைகிறோம். அவரது வார்த்தைகள், நகைச்சுவை உணர்வு தமிழ் கலாச்சாரத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் போற்றப்படும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு எங்களின் இரங்கல்’ என்று தெரிவித்துள்ளது.