"சேவாக் மகன் என்பதால் சீண்டலா?" களத்தில் நடப்பதை உடைத்த ஆர்யவீர்.. தந்தை சொன்ன சீக்ரெட் டிப்ஸ்
"சேவாக் மகன் என்பதால் சீண்டலா?" களத்தில் நடப்பதை உடைத்த ஆர்யவீர்.. தந்தை சொன்ன சீக்ரெட் டிப்ஸ்
டெல்லி: இந்திய கிரிக்கெட்டின் அதிரடி ஜாம்பவான் வீரேந்தர் சேவாக்கின் 18 வயது மகன் ஆர்யவீர் சேவாக், தற்போது இளம் கிரிக்கெட் வீரராக களம் கண்டு வருகிறார். சமீபத்தில் டெல்லி பிரீமியர் லீக் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அண்டர்-19 தொடரில் விளையாடிய அவர், தனது தந்தையின் பெயரால் களத்தில் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் மற்றும் கிண்டல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 28, 47 மற்றும் 34 ரன்கள் எடுத்த ஆர்யவீர், நல்ல தொடக்கம் கிடைத்தும் அதை பெரிய சதமாக மாற்ற முடியாமல் போனது ஏமாற்றம் அளித்ததாகக் கூறினார். எனினும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை துணிச்சலாக எதிர்கொண்டது தனது பேட்டிங் நம்பிக்கையை பல மடங்கு உயர்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தந்தையின் பெயரை வைத்து எதிரணியினர் சீண்டுவது குறித்துப் பேசிய ஆர்யவீர், "சேவாக் என்ற குடும்பப் பெயர் எனக்கு எந்த சுமையையும் தரவில்லை; மாறாக அது எனக்குப் பெருமை. என் தந்தை நாட்டுக்காகச் செய்த சாதனைகளை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன். சமூக வலைதளங்களில் மக்கள் என்னைப் புகழலாம் அல்லது திட்டலாம். ஆனால் அந்தப் பேச்சுகளை நான் காதில் வாங்கிக்கொள்வதில்லை. என் ஆட்டத்தின் மீது மட்டுமே முழு கவனம் செலுத்துகிறேன்" என்றார்.
மேலும் தனது தந்தை சேவாக் அளித்த ஆலோசனையை நினைவுகூர்ந்த அவர், "பேட்டிங்கை எப்போதுமே எளிமையாக வைத்திருக்க வேண்டும் என்று அப்பா கூறுவார். அடிக்க வேண்டிய பந்தை விளாச வேண்டும்; விட வேண்டிய பந்தை தொடாமல் விட்டுவிட வேண்டும்; தடுக்க வேண்டிய பந்தை மட்டும் நிதானமாகத் தடுக்க வேண்டும். பேட்டிங் நுணுக்கங்களை விட மனரீதியான பலமே மிக முக்கியம் என அப்பா அறிவுரை கூறியுள்ளார்" என்று தெரிவித்தார்.
மேலும், தான் விராட் கோலியின் தீவிர ரசிகர் என்றும், அவரை 2 அல்லது 3 முறை நேரில் சந்தித்துப் பேசியது மறக்க முடியாத அனுபவம் என்றும் ஆர்யவீர் மகிழ்ச்சியுடன் கூறினார். ஆர்யவீர் சேவாக் உடன் ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட்டும் இந்தியா அண்டர் 19 அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார்.