செங்கல்பட்டு மாவட்டத்தில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் 50,000 மெட்ரிக் டன் நெல் மழையில் நனைந்து சேதம்: விவசாயிகள் அவதி
செங்கல்பட்டு மாவட்டத்தில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் 50,000 மெட்ரிக் டன் நெல் மழையில் நனைந்து சேதம்: விவசாயிகள் அவதி
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 50,000 மெட்ரிக் டன் நெல் மழையில் நனைந்து சேதம் அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், தொழுப்பேடு சமத்துவபுரத்திற்கு எதிரே உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் சுமார் 50,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்து முற்றிலும் சேதமடைந்து உள்ளது. மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக சேமிக்க மூடப்பட்ட கிடங்கு வசதி இல்லாததால் திறந்தவெளியில் தார்ப்பாயால் மூடி வைத்ததன் விளைவாக இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளின் உழைப்பையும், பொது மக்களின் உணவு பாதுகாப்பையும் அவமதிக்கும் செயலாகும். இது ஒரு இயற்கை பேரிடர் அல்ல, நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட செயற்கை பேரிடர். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
மழையில் நனைந்து சேதமடைந்துள்ள நெல் மூட்டைகளை தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் சங்க நிர்வாகிகள் நேற்றுமுன்தினம் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர், தமிழ்நாடு விவசாய சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஒன்றியம், ஆத்தூர் சமத்துவபுரம் எதிரில் செயல்படும் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் இந்திய உணவு கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 50,000 மெட்ரிக் டன் நெல் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது. இதேபோன்று திருக்கழுக்குன்றம் அடுத்த புள்ளேரி பகுதியில் உள்ள நெல் சேமிப்பு திறந்த வெளி கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. உடனடியாக கலெக்டர் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து சேதத்தை கணக்கிட்டு, சேதமடைந்த நெல்லை முறையாக அப்புறப்படுத்தி, மீதமுள்ள நெல்லை பாதுகாக்க வேண்டும்.
மழைக்காலம் துவங்கியும் திறந்தவெளியில் நெல்லை பாதுகாப்பின்றி வைத்திருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழுப்பேடு உள்பட செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள திறந்தவெளி கிடங்குகளை உடனடியாக மூடிவிட்டு, அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மூடப்பட்ட சேமிப்பு கிடங்குகளை கட்ட வேண்டும். சேதமடைந்த நெல் பொது விநியோக திட்டத்திற்கு செல்லாமல் தடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதை மிக முக்கிய பிரச்னையாக கருதி தீர்வு காண வேண்டும் என இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மதுராந்தகம் ஏரி விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு பாலாறு படுகை விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தவெக அரசின் அலட்சியம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நெல் அறுவடை தொடங்கும். அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 300 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். அந்தந்த பகுதிகளில் விளையும் நெல்லை, அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வழங்குவார்கள். அரசு அறிவிக்கும் விலைக்கு விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படும். கடந்த திமுக ஆட்சியில் இது சிறப்பாக நடந்தது. ஆனால் இந்தாண்டு தவெக அரசு, இதுவரை நேரடி கொள்முதல் நிலையம் தொடங்கவில்லை. இதனால் விவசாயிகள், அறுவடை செய்த நெல்லை இடைத்தகர்கள் மூலம் தனியாருக்கு விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு மூட்டைக்கு குறைந்தது ரூ.500 முதல் ரூ.600 வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்வதும், சேமித்து வைக்க இடம் இல்லை என்பதும் தெரிந்தும், இந்த அரசு மெத்தமாக உள்ளதாக விவசாயிகள் சரமாரியாக குற்றம்சாட்டி வருகின்றனர்.