சென்னை திரும்பிய மக்களால் கடும் நெரிசல்: 2 கி.மீ. தூரம் ஊர்ந்து சென்ற வாகனங்கள்
சென்னை திரும்பிய மக்களால் கடும் நெரிசல்: 2 கி.மீ. தூரம் ஊர்ந்து சென்ற வாகனங்கள்
சென்னை: தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்களால் சிங்கபெருமாள்கோவில் பகுதியில் நேற்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்ந்து சென்ற வாகனங்களால் பயணிகள் அவதிப்பட்டனர். சென்னையில் உள்ள மக்கள் தங்களின் சொந்த ஊரில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கடந்த இரண்டு நாட்களாக சென்றனர்.
இதில், சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி திங்கள் என தொடர் மூன்று நாட்கள் விடுமுறை என அடுத்தடுத்து அமைந்தது. இந்நிலையில் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை முடிந்த நிலையில் மக்கள் மீண்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி படையெடுத்தனர். குறிப்பாக திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பியதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் முதல் திருத்தேரி என 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், கார், வேன், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் ஒரே நேரத்தில் சென்னை திரும்பியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த பகுதியில் உள்ள சிங்கபெருமாள்கோவில் போலீசார் மற்றும் தாம்பரம் மாநகர போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.