செப்டம்பர் 1 முதல் புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியிடுவதில்லை - தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை
திரைப்படத் துறையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தமிழ் திரையுலகில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் திரைப்படங்களின் வெளியீடு தொடர்பான விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது,
இந்த ஆலோசனையின் முடிவில், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், புதிதாக வெளியாகும் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்கு பிறகே, ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையையும் தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தி சினிமாவில் ஒரு திரைப்படம் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே ஒடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ள நிலையில், தமிழ் சினிமாவில் 4 வாரங்களில் ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. திரையரங்க ரிலீஸ்க்கும் ஓடிடி ரிலீ்ஸ்கும் இடையிலான கால இடைவெளி அதிகரிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதேபோல், திரைப்படத் துறையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள தயாரிப்பாளர் சங்கம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களின் படப்பிடிப்புகளையும் நடத்துவதில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.