செயற்கை நுண்ணறிவு: மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே முக்கியம்
செயற்கை நுண்ணறிவின் உண்மையான மதிப்பீடு அதன் மாதிரிகள் எந்த அளவு ஆற்றல்மிக்கதாக இருக்கின்றன என்பதில் அல்ல. மாறாக, மக்களின் வாழ்க்கையை அது எந்த அளவிற்கு மேம்படுத்துகிறது என்பதில்தான் உள்ளது என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுக் கூட்டத்தில் பேசிய திருமதி டியோ, செயற்கை நுண்ணறிவு மேம்பாடு குறித்தும் அதைச் செயல்படுத்துவது குறித்தும் உள்ள சிங்கப்பூரின் அணுகுமுறையைச் செவ்வாய்க்கிழமை (செப்டபர் 22) முன்வைத்தார்.
செயற்கை நுண்ணறிவு மக்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதில் சிங்கப்பூர் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க அதிகாரிகள் இன்னும் திறம்பட பணியாற்றிக் குடிமக்களுக்கான சேவைகளை மேம்படுத்தச் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பொதுச் சேவைத் துறையில் பயன்படுத்துவது என்பதும் ஆராயப்படுவதாகத் திருமதி டியோ சுட்டினார்.
தரவுகளைப் பகுபாய்வு செய்வது, வரைவுகளைத் தயாரிப்பது போன்ற பணிகளுக்குப் பொதுச் சேவை ஊழியர்களில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் அடிக்கடி செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.
முக்கியமான முடிவுகளுக்கு அரசாங்க அதிகாரிகளையே பொறுப்பேற்கச் செய்யும் அதேவேளை, ஒட்டுமொத்த பணி நடைமுறைகளையும் மாற்றியமைக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றார் அவர்.
மேலும், பொதுமக்களின் கருத்துகளைச் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு விரைவாக அனுப்பவும் சிங்கப்பூரின் எல்லைகளில் மில்லியன்கணக்கான சரக்குக் கப்பல்களில் ஏற்படும் கோளாறுகளை அடையாளம் காணவும் போலி நபர்கள் அல்லது இணையத்தளங்கள் மூலம் நடைபெறும் மோசடிகள்குறித்த அறிகுறிகளைக் கண்டறியவும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது என்று திருமதி டியோ விவரித்தார்.
இருப்பினும், மேலும் விரிவடையவிருக்கும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டைப் பொதுமக்கள் தொடர்ந்து சாந்திருக்க வேண்டும் என்றால், அந்தத் தொழில்நுட்பத்தின்மீது அவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.