சிங்கப்பூர் அரசாங்க அமைப்புகள் மீது ஏஐ தாக்குதல்கள் இல்லை
கண்காணிக்கப்படாத செயற்கை நுண்ணறிவுக் (ஏஐ) கட்டமைப்புகள் உள்ளூர் அரசாங்க அமைப்புகளின்மீது தாக்குதல்கள் நடத்தியதாக எந்த அறிக்கையும் வரவில்லை என்று தகவல், மின்னிலக்க, மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ அக்டோபர் 6ஆம் தேதி நாடாளுமன்ற எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஆபத்துகள், தகவல் கசிவுகள் குறித்து பிறர் அறிவிக்கும்வரை நிறுவனங்கள் காத்திருக்கக்கூடாது என்று தகவல், மின்னிலக்க, மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் புதன்கிழமை (அக்டோபர் 7) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“எங்களை ஊடுருவுகிறார்கள் என்று யாராவது சொல்லும்வரை நாம் காத்திருக்க முடியாது. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய பொறுப்பு சிங்கப்பூருக்கும் குறிப்பாக, முக்கியத் தகவல் உள்கட்டமைப்பைச் செயல்படுத்தும் நமது அமைப்புகளுக்கும் உள்ளது,” என்று அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புகளால் ஏற்படக்கூடிய உத்தேச ஊடுருவல்களுக்கு எதிராக அரசாங்க அமைப்புகளிடம் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளனவா என்றும் அதுபோன்ற ஊடுருவல்கள் எதுவும் நடந்துள்ளனவா என்றும் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபட்லி ஃபௌசி கேள்வி எழுப்பியிருந்தார்.
அதோடு, அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்பாளர்கள் இணையச் சம்பவங்கள் குறித்து அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கவேண்டிய கட்டாயம் உள்ளதா என்று மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் யாம் வினவினார்.
பாதுகாக்கப்பட்ட சூழல்களைச் செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புகள் வெற்றிகரமாகத் தாண்டிச்செல்ல முயற்சிகள் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னணிச் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களின் கண்காணிக்கப்படாத கட்டமைப்புகள் நடத்திய தாக்குதல்கள் குறித்த செய்திகள் அண்மைய மாதங்களில் வெளிவந்தன.
“வெளிநாட்டுச் சம்பவங்கள் உட்பட அனைத்து மேம்பாடுகளையும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து, நமது பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அறிக்கை வெளியிடும் முறைகளையும் வலுப்படுத்துவதற்குத் தகுந்த பாடங்களைப் பின்பற்றுவோம்,” என்று தமது எழுத்துபூர்வ பதிலில் திருவாட்டி டியோ கூறினார்.