சிங்கப்பூர் அதிக சம்பளம்: மலேசியத் திறனாளர்கள் வெளியேறுவது ஏன்?
கோலாலம்பூர்: மலேசியாவில் பணிபுரியும் தொழில்முறை வல்லுநர்கள் பெறும் சராசரி மாதச் சம்பளத்தைவிட, சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசிய வல்லுநர்கள் கணிசமாக அதிகச் சம்பளம் பெறுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
2025ஆம் ஆண்டு புள்ளியியல் துறை ஆய்வின்படி மலேசியாவில் உள்ள வல்லுநர்களின் சராசரி மாதச் சம்பளம் 6,124 ரிங்கிட் ஆக உள்ளது என்று மலேசிய நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வ கேள்விக்கு பதிலளித்த மனிதவள அமைச்சர் ஆர்.ரமணன் கூறினார்.
சிங்கப்பூரில் பணிபுரியும் பெரும்பாலான மலேசிய வல்லுநர்கள் மாதம் $4,001 சிங்கப்பூர் வெள்ளி முதல் $7,000 வெள்ளி வரை (12,773 ரிங்கிட் முதல் 22,348 ரிங்கிட் வரை) ஈட்டுவதாக ‘டேலண்ட்கார்ப்’ அமைப்பின் ஆய்வு காட்டுகிறது என்று அவர் கூறினார்.
மலேசியர்கள் சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்வதற்கு உயர் சம்பளமும் அதிக வருமான வாய்ப்புகளுமே முதன்மைக் காரணம் என்று ஆய்வில் பங்கேற்ற 94.5 விழுக்காட்டினர் கூறியதாக அமைச்சர் தெரிவித்தார்.
குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த வல்லுநர்கள் சிங்கப்பூரில் மாதம் $10,000 வெள்ளிக்கும் மேல் சம்பாதிக்க முடிகிறது.
இந்தச் சம்பள இடைவெளியைக் குறைக்கவும் திறனாளர்கள் வெளியேறுவதைத் தடுக்கவும் மலேசிய அரசாங்கம் வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திறனாளர்கள் வெளியே செல்வதைத் தடுக்கவும் உள்நாட்டுச் சம்பளத்தை உயர்த்தவும் ‘முற்போக்குச் சம்பளக் கொள்கை’ மாதிரியை மலேசிய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் (JS-SEZ) கீழ் தகுதியுள்ள ஊழியர்களுக்கு 15 விழுக்காடு நிலையான தனிநபர் வருமான வரிச் சலுகை வழங்கப்படுகிறது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
சிங்கப்பூர் நிறுவனங்களை ஜோகூருக்கு ஈர்ப்பதன் மூலம், நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவு குறைவதோடு மலேசிய ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் வழங்க முடியும்.
அத்துடன், வெளிநாடுகளில் உள்ள மலேசியத் திறனாளர்களை மீண்டும் தாயகம் ஈர்க்க ‘டேலண்ட்கார்ப்’ அமைப்பின் சிறப்புத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.