சிங்கப்பூர் சொத்து மேம்பாட்டாளர்கள்: குடும்பங்களுக்கு உகந்த இடங்களை அமைத்தல்
சிங்கப்பூரில் திருமணத்தையும் குழந்தைப்பேற்றையும் ஊக்குவிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துவரும் நிலையில், சொத்து மேம்பாட்டாளர்கள் தங்களின் திட்டங்களில் குடும்பங்களுக்கு உகந்த இடங்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்று தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா வலியுறுத்தி இருக்கிறார்.
சிங்கப்பூர்ச் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்கள் சங்கத்தின் (ரெடாஸ்) மத்திய இலையுதிர்கால நண்பகல் விருந்து புதன்கிழமை (செப்டம்பர் 23) நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் இந்திராணி, “சிறு குழந்தைகளுக்கும் முதியோருக்கும் ஏற்ற ‘நோக்கமும் ஒருங்கிணைப்பும் கொண்ட’ இடங்களைச் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்கள் உருவாக்க வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.
நாட்டில் குழந்தைப்பேறு விகிதம் 2025ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சரிந்ததையடுத்து, குழந்தைப்பேற்றை ஆதரிக்கும் அரசாங்கத்தின் விரிவான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அமைச்சரின் இக்கோரிக்கை அமைந்துள்ளது.
அரசால் மட்டுமே குழந்தைப்பேற்று விகிதச் சரிவை மாற்றியமைக்க முடியாது என்றும் அதற்குச் சமூகத்தில் அனைத்துத் தரப்பினரின் கூட்டுமுயற்சியும் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதில் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.
வணிகக் கட்டடங்களில் தாய்ப்பாலூட்டும் அறைகளையும் குழந்தைகளும் முதியோரும் பயன்படுத்தக்கூடிய பொது இடங்களையும் அமைக்குமாறு பிரதமர் அலுவலக அமைச்சருமான குமாரி இந்திராணி யோசனை தெரிவித்தார்.
மேலும், கடைத்தொகுதிகளைக் கேளிக்கை மையங்களாக மட்டும் பார்க்காமல், குடும்பங்கள் ஒன்றுகூடும் மையங்களாக மாற்றுமாறு அவர் வலியுறுத்தினார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
முதலாளிகளாக விளங்கும் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்கள், பராமரிப்புப் பொறுப்புகளைக் கொண்ட ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய பணிச் சூழல்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பழைய நடைமுறைகளை விட்டுவிட்டு, ஊழியர்களின் தேவைகளுக்கேற்ப மாற்றங்களைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, பெரிய கட்டுமானத் திட்டங்களைச் சோதிக்கும் அமைப்புகளுக்கான விதிமுறைகள் 2028 செப்டம்பர் முதல் கடுமையாக்கப்படும் என்றும் அமைச்சர் இந்திராணி அறிவித்தார்.
அரசாங்கமும் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்களும் இணைந்து குடும்பங்கள் செழித்து வாழக்கூடிய சிறந்த சிங்கப்பூரை உருவாக்குவர் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.