📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 12, 2026 06:04 PM

சிங்கப்பூர் தொண்டூழியம்: நல்லிணக்கத்தைப் பேணும் தமிழ் இளையர்

சிங்கப்பூர் தொண்டூழியம்: நல்லிணக்கத்தைப் பேணும் தமிழ் இளையர்

சிங்கப்பூர் போன்ற பன்முகச் சமூகத்தில் மக்களை ஒன்றாக வைத்திருப்பது சட்டங்கள் மட்டுமல்ல, சக மனிதர்கள்மீது கொண்ட அக்கறையும்தான்.

அந்த அக்கறையை நேரமாகவும் உழைப்பாகவும் தருபவர்களே தொண்டூழியர்கள். அத்தகைய தன்னலமற்ற சேவையாளர்களைச் சிறப்பிக்கும் வகையில் ‘ஒன்பீப்பள்.எஸ்ஜி’ அமைப்பின் தொண்டூழியர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்நிகழ்ச்ச்சியில் சமூக நல்லிணக்கத்திற்காக உழைத்த தொண்டூழியர்கள் சிறப்பிக்கப்பட்டனர். அதில் ‘உறவுப் பாலம் அமைப்போர் விருது’, ‘நீண்டகாலச் சேவை விருது’ எனும் பிரிவுகளில் விருதுகளை பெற்ற இருவர் விருதிற்காக அல்லாது விருப்பத்திற்காகவே தொண்டூழியம் புரிவதாகக் கூறினர்.

உரையாடலே மாற்றத்தின் முதல் தீப்பொறி

கடந்த மூன்று ஆண்டுகளாக ‘ஒன்பீப்பள்.எஸ்ஜி’ அமைப்புடன் இணைந்து தொண்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறார் துரை மாணிக்கம் நிஷாந்த், 22.

இளையர்களையும் மூத்தோரையும் ஒன்றாக அமர வைத்து மனநலம் குறித்து உரையாட வைப்பதுதான் அச்சேவையில் இவரது முக்கியப் பணி.

“இரக்கம் காட்டுவது எளிது. ஆனால், உண்மையான அன்பையும் புரிதலையும் உருவாக்க ஒரு பாலம் தேவை. தொண்டூழியர்கள்தான் அந்தப் பாலம் என்பதே என் கருத்து,” என்றார் இந்த இளையர்.

இணையத்தில் பரவும் இன, சமயம் சார்ந்த வெறுப்புப் பேச்சுகள் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் சவால்கள் குறித்து ஏற்படுத்திய விழிப்புணர்வுக்காக ‘உறவுப் பாலம் அமைப்போர் விருது’ பெற்றார் நிஷாந்த்.

சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் பயிலும் அவர், ‘‘படிப்புக்கு நடுவில் நேரம் ஒதுக்குவது கடினம்தான். ஆனால், இன்று நாம் விதைக்கும் ஒரு சிறு உரையாடல், ஐந்து ஆண்டுகள் கழித்து சமூகத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதை நினைக்கும்போது அதுவே பெருமகிழ்ச்சி,” என்றார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

‘‘சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டும். ஆனால், எப்படி என்று மனத்தில் கேள்விகள் இருந்தால் தொண்டூழியத்தில் இறங்குங்கள், விடை கிடைக்கும்,” என்பதே இவரது அறிவுரை.

சகிப்புத்தன்மையே வலிமை

ஏறத்தாழ 17 ஆண்டுகளாக நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பயிற்றுநராகவும் இருக்கும் கார்த்திக் காந்தி, 37, ‘ஒன்பீப்பள்.எஸ்ஜி’ அமைப்பில் 11 ஆண்டுகளாகத் தொண்டாற்றி வருகிறார்.

2015ல் தற்செயலாகத் தொடங்கிய பயணம் இன்று 50க்கும் மேற்பட்ட சமய நல்லிணக்கம் சார்ந்த அமர்வுகளை, நிகழ்ச்சிகளை வழிநடத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளதாகச் சொன்னார் திரு கார்த்திக்.

வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்த மாணவர்களைப் பள்ளிவாசல்களுக்கும் கோயில்களுக்கும் அழைத்துச் சென்று, அவர்கள் தயக்கமின்றி தங்கள் சந்தேகங்களைக் கேட்க ஒரு பாதுகாப்பான தளத்தை உருவாக்குவது இவரது தொண்டூழியத்தின் அங்கம்.

“பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சிங்கப்பூர் வேறு. ஆனால், இன்றோ தகவல்கள் வேகமாகப் பரவும் காலம். இப்போதுதான் சகிப்புத்தன்மையும் அடுத்தவரைப் புரிந்துகொள்ளும் மனப்பான்மையும் மிக மிக அவசியம்,” என்று திரு கார்த்திக் கூறினார்.

வார இறுதி நாள்களில் பலரும் தங்களுக்குப் பிடித்தவற்றை செய்ய விரும்புகையில், கிட்டத்தட்ட அனைத்து வார இறுதி நாள்களையும் தொண்டூழியப் பணிக்காக ஒதுக்குகிறார் இந்த இளையர்.

“விருப்பம் இருந்தால் எதுவுமே சுமையில்லை. அது வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிடும். பிறகு அதுவே நம் வாழ்வின் அடையாளமாகவும் மாறிவிடும். பிறர் வாழ்விலும் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்தும்,” என்று உரக்கச் சொல்கிறார் திரு கார்த்திக்.