📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 13, 2026 12:37 PM

சிங்கப்பூரில் கணினி விலை அதிகரிப்பு

சிங்கப்பூரில் கணினி விலை அதிகரிப்பு

புதிய கணினிகளை வாங்க நினைப்போருக்கு அதன் விலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும்.

ஐடிசி ஆய்வு நிறுவனத்தின் அண்மைச் சந்தைத் தரவுகளின்படி, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் கணினிகளின் சராசரி விலைகள் கடந்த ஆண்டைவிட 40 விழுக்காடு வரை உயர்ந்துள்ளன. உதிரிபாகங்களின் தட்டுப்பாடு அதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, செயற்கை நுண்ணறிவுச் (ஏஐ) சேவைகளுக்கு ஆதரவளிக்கும் உலகளாவிய தரவு நிலையங்களின் விரிவாக்கத்திற்குப் பெரும்பாலான உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் கணினி நினைவகம், சேமிப்பகம், வரைகலைச் சில்லுகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கணினி விலை அடுத்த ஆண்டு முழுதும் உயர்வாக இருக்கும் என்றும் அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் சற்றுக் குறைய வாய்ப்புள்ளது என்றும் ஐடிசி கருதுகிறது.

ஐடிசி புள்ளிவிவரங்களின்படி, சாதாரண மடிக்கணினிகளின் சராசரி விலை இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் 26 விழுக்காடு உயர்ந்து $1,650 ஆகியுள்ளது; இது ஓராண்டுக்கு முன்பு கிட்டத்தட்ட $1,300ஆக இருந்தது. இவை வழக்கமாக விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படுகின்ற 16 கிகாபைட் நினைவக, 512 கிகாபைட் சேமிப்பக வசதி கொண்ட மடிக்கணினிகள்.

சாதாரண மேசைக் கணினிகளின் சராசரி விலை அதே காலகட்டத்தில் $1,100லிருந்து 28 விழுக்காடு கூடுதலாகி $1,410 ஆகியுள்ளது.

விளையாட்டுக்குப் பயன்படும் அதிநவீன மேசைக் கணினிகளின் சராசரி விலை $1,330லிருந்து 39 விழுக்காடு அதிகரித்து கிட்டத்தட்ட $1,860க்குக் கூடியுள்ளது.

விளையாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் மடிக்கணினிகளின் சராசரி விலையும் 17 விழுக்காடு உயர்ந்து $2,460லிருந்து $2,890 ஆகியுள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

பழைய இருப்பை விற்கச் சில வகை மடிக்கணினிகள் தள்ளுபடி விலையில் விற்கப்பட்டதே இந்த மிதமான உயர்வுக்குக் காரணம் என்று ஐடிசி தெரிவித்தது.

ஆப்பிள் நிறுவனமும் அண்மையில் அதன் அனைத்துச் சாதனங்களின் விலையையும் 15 முதல் 25 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக அறிவித்தது.

கணினித் தரவுகளை அணுகப் பயன்படும் நினைவகச் சில்லுகளின் விநியோகம் குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

நினைவகச் சில்லுகளுக்குரிய கடுமையான தட்டுப்பாட்டை நிபுணர்கள் சிலர் பேரழிவு என்று வருணிக்கின்றனர்.

“தகவல் தொழில்நுட்பத் துறையை முழுமையாகப் பாதித்துள்ள நினைவகத் தட்டுப்பாட்டு நெருக்கடியால், கடந்த ஆண்டிலிருந்தே கணினிச் சந்தையில் கணிசமான விலை உயர்வு காணப்படுகிறது,” என்று ஐடிசி ‌ஏ‌ஷியா பசிபிக் நிறுவனத்தின் இணை ஆய்வு நிபுணர் ஹோ ஜின் வெய் கூறினார்.