📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 15, 2026 10:31 PM

சிங்கப்பூரில் நான்கு நாள்களில் 444 மின்சிகரெட், சாதனங்கள் பிடிபட்டன

சிங்கப்பூரில் நான்கு நாள்களில் 444 மின்சிகரெட், சாதனங்கள் பிடிபட்டன

சிங்கப்பூரில் நான்கு நாள்களில் மட்டும் 444 மின்சிகரெட்டுகளும் அவை தொடர்பான சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஜூலை 20ஆம் தேதி முதல் ஜூலை 23ஆம் தேதி வரை விமானம், தரைவழி மற்றும் கடல்வழிப் பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவை பிடிபட்டதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூருக்குள் நுழைந்த பயணிகள் தங்கள் கைவசம் மின்சிகரெட்டுகளை வைத்திருந்த 56 சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் அது தெரிவித்துள்ளது.

மொத்த சம்பவங்களில் 77 விழுக்காடு, குறுகியகால வருகையாளர்கள் தொடர்பானவை என்றும் எஞ்சிய 23 விழுக்காடு நீண்டகால வருகையாளர்கள் மற்றும் குடிமக்களையும் நிரந்தரவாசிகளையும் உள்ளடக்கிய சிங்கப்பூர்வாசிகள் தொடர்புடையவை என்றும் ஆணையம் கூறியுள்ளது.

மின்சிகரெட்டுகளுக்கு சிங்கப்பூரில் தடை உள்ளது. அவற்றை வைத்திருப்பது, பயன்படுத்துவது மற்றும் விற்பது குற்றமாகும்.

மின்சிகரெட் பயன்படுத்துவோருக்கு $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். அதேவேளை அவற்றை விற்போருக்கு $200,000 வரை அபராதமும் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம். மின்சிகரெட்டுகளைக் கடத்துவோருக்கு $300,000 வரை அபராதமும் ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.