சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பு: கிரேஸ் ஃபூவின் விளக்கம்
நெருக்கடி வேளையில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அனைவருக்கும் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்வதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த உணவு மீள்திறன் குறித்த தனிநபர் தீர்மானத்துக்குப் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர், புவிசார் அரசியல் பதற்றங்கள், ‘எல் நினோ’ போன்ற பருவநிலை மாற்றங்களால் அரிசி உள்ளிட்ட உலகளாவிய உணவு விநியோகம் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என்றார்.
சிங்கப்பூர் தனது உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தல், அரிசி போன்றவற்றைச் சேமித்து வைத்தல், உள்ளூர் உற்பத்தியைப் பெருக்குதல், அனைத்துலகப் பங்காளித்துவங்களை வலுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
உள்ளூர் பண்ணைகளின் செயல்பாட்டுச் செலவுகளுக்கு நிரந்தர மானியம் வழங்குவதற்குப் பதிலாக, அவை தொழில்நுட்ப உதவியுடன் சொந்தமாகச் செயல்படும் திறனை வளர்க்கவே அரசாங்கம் உதவுகிறது.
இதற்காக 2019 முதல் $240 மில்லியனுக்குமேல் ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண்மை துறையின் உருமாற்ற நிதியின்கீழ் 160க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஏறக்குறைய $60 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் காய்கறிப் பண்ணைகளின் உற்பத்தித்திறன் ஹெக்டருக்கு 20 விழுக்காடும் கடலுணவுப் பண்ணைகளின் உற்பத்தித்திறன் 46 விழுக்காடும் அதிகரித்துள்ளது.
உள்ளூர் விளைபொருள்களை அரசு நிறுவனங்கள் கட்டாயம் வாங்க வேண்டும் என்று சட்டம் இயற்றினால் உணவு விலைகள் உயரும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், அதற்குப் பதிலாகப் பண்ணைகளின் உற்பத்தித்திறனை அதிகரித்து சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதே சரியான அணுகுமுறை என்றார்.