📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 19, 2026 02:33 PM

“சினிமா டயலாக்கை வைத்து அரசியல் செய்யும் விஜய்!”

“சினிமா டயலாக்கை வைத்து அரசியல் செய்யும் விஜய்!”

“சினிமா டயலாக்கை வைத்து அரசியல் செய்யும் விஜய்!” - விளாசித் தள்ளுகிறார் ராஜீவ்காந்தி

நாடாளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்களுக்கான இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கெனவே சபாநாயகரிடம் கோரிக்கை வைத்திருந்தோம். தேநீர் விருந்தின்போது ‘அதை மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறோம்’ என ஏற்கெனவே கனிமொழி தெரிவித்திருக்கிறார்.

“தொகுதி மறுவரையறை விவகாரத்தில், தி.மு.க-வின் நிலைப்பாடுதான் என்ன?”

“கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில், தொகுதி மறுவரையறை மசோதா வந்தபோது, எதிராக வாக்களித்துத் தோற்கடித்தோம். இப்போதும் தி.மு.க-வின் நிலைப்பாடு அதேதான்!”

“அப்படியென்றால், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக அண்மையில் த.வெ.க அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தி.மு.க பங்கேற்காதது ஏன்?”

“புதிய மறுவரையறை மசோதா மறுபடியும் நாடாளுமன்றத்தில் எப்போது வரும், அதில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என எந்தத் தகவலும் தெரியாத நிலையில், காவிரி பிரச்னையைத் திசைதிருப்பும் நோக்கத்தோடு காங்கிரஸ் கட்சியின் பின்புலத்தில் த.வெ.க அரசு அனைத்துக் கட்சி எம்.பி-க்கள் கூட்டத்தைக் கூட்டியது. இவர்களது அரசியல் சூழ்ச்சிக்கு, நாங்கள் ஏன் பலியாக வேண்டும்... அதனால்தான் பங்கேற்கவில்லை!”

“ஆனால், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘புதிய தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை’ தி.மு.க ஆதரித்திருக்கிறதே?”

“நீட் தேர்வு விலக்கு, தமிழகத்துக்கான உரிய நிதிப் பகிர்வு, மேகதாது அணை கட்ட எதிர்ப்பு என மத்திய அரசுக்கு எதிராக, சட்டமன்றத்தில் த.வெ.க அரசு கொண்டுவந்த மக்கள் பிரச்னைகளுக்கான அனைத்துத் தீர்மானங்களையும் ஏற்கெனவே தி.மு.க ஆதரித்திருக்கிறது. அந்த வரிசையில், புதிய தொகுதி மறுவரையறைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தையும் மாநில நலன் சார்ந்த மக்கள் பிரச்னை என்ற அடிப்படையில் தி.மு.க ஆதரித்திருக்கிறது. இதிலென்ன குழப்பம்?”

“‘மத்திய பா.ஜ.க-வுடன் தி.மு.க நெருக்கம் காட்டுகிறது. கூட்டணியில் இணையப்போகிறது’ என்றெல்லாம் சொல்லப்படுகிறதே?”

“சித்தாந்தரீதியாக பா.ஜ.க எப்போதுமே எங்கள் எதிரி; பதவிக்காக முதுகில் குத்தும் எட்டப்பன் காங்கிரஸ் மற்றோர் எதிரி. இந்த இரு கட்சிகளுடனும் எங்களுக்கு இனி உறவு கிடையாது.”

“அண்மையில், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அளித்த தேநீர் விருந்தில், தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கலந்து கொண்டிருக்கிறாரே?”

“கடந்தகாலத்தில், ஆளுநர் நடத்திய தேநீர் விருந்திலேயே கலந்துகொள்ளாமல் தவிர்த்த தி.மு.க., இப்போது மக்களவை சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் கலந்துகொள்வது சந்தேகத்தை ஏற்படுத்தும்தானே?”

“ஆளுநர் நடத்திய தேநீர் விருந்தில் கலந்துகொள்ளாததை வைத்து மட்டுமே எங்களைப் பற்றி முடிவு செய்துவிட முடியாது. ஏனெனில், ஓர் இயக்கத்தினுடைய செயல்பாட்டால், என்ன ரிசல்ட் கிடைக்கிறது என்பதை வைத்துத்தான், அந்த இயக்கத்தைப் பற்றி முடிவெடுக்க முடியும். அந்த வகையில், தி.மு.க தனது கொள்கையில் தெளிவாக இருக்கிறது.”

“ ‘தி.மு.க தலைவர்களை ஊழல் வழக்குகளிலிருந்து காப்பாற்ற பா.ஜ.க-வின் கொத்தடிமையாக மாறத் தயாராகிவிட்டது தி.மு.க’ என்றெல்லாம் விமர்சித்திருக்கிறாரே அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்?”

“ஆர்.எஸ்.எஸ் சாக்காவில் அரை டிரவுசர் போட்டுக்கொண்டு பங்கேற்ற, மத்திய பா.ஜ.க அரசின் சி.ஐ.ஏ ஏஜென்ட்டான அமைச்சர் நிர்மல் குமார், இப்படியெல்லாம் பேசி கீழ்மட்டத்திலுள்ள தொண்டர்களின் மனதை திசைதிருப்பப் பார்க்கிறார். பா.ஜ.க-வில் ஒன்றாகக் கூடி குலாவிவிட்டு, ‘பா.ஜ.க-வுக்கு எதிராக எதுவுமே பேச மாட்டோம்’; பா.ஜ.க-வுக்கு எதிராக எந்த கருத்துருவாக்கமும் செய்ய மாட்டோம்’ என்றெல்லாம் வாய்மூடி மௌனியாக இருக்கும் த.வெ.க அமைச்சர்கள், முதலமைச்சர் உள்ளிட்டவர்கள்தான் பா.ஜ.க-வுடன் மறைமுகக் கூட்டணி வைத்திருக்கிறார்கள்!”

“மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டமன்றத் தீர்மானம், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல்முறையீடு என பா.ஜ.க எதிர்ப்பில் த.வெ.க அரசு உறுதியாகத்தானே நிற்கிறது?”

“கடந்தகாலத்தில், மத்திய பா.ஜ.க-வின் வெறுப்பரசியலுக்கு எதிராக தி.மு.க காத்திரமான கருத்துருவாக்கங்களை மக்கள் மத்தியில் விதைத்திருக்கிறது. ஆனால், நீட் தேர்வு முறைகேடுக்கு எதிரான மாணவர் போராட்டத்தைக் கொடூரமாக ஒடுக்கிய பா.ஜ.க அரசைக் கண்டித்தாரா முதல்வர் விஜய்... `வந்தே மாதரம்’ பாடலுக்கு எதிராக இதுவரை வாய் திறக்கவில்லையே ஏன்... ஆக, பா.ஜ.க-வை எதிர்க்காமல் ‘கம்’மென்றும், சட்டமன்றத்தில் ‘உம்’மென்றும் இருந்தால் வாழ்க்கை ‘ஜம்’மென்று போகும் எனத் தனது சினிமா பட டயலாக்கை அரசியலிலும் கடைப்பிடிக்கிறார், இன்றைய எலைட் முதல்வர் விஜய். இந்த உண்மையை மறைக்கவே தி.மு.க-மீது பழிபோடுகின்றனர்.”