📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 29, 2026 04:04 PM

சிறார், இளையர்களைப் பாதுகாக்க பள்ளிவாசல்களுக்குப் புதிய பாதுகாப்புச் சட்டக் கட்டமைப்பு: ஸாக்கி

சிறார், இளையர்களைப் பாதுகாக்க பள்ளிவாசல்களுக்குப் புதிய பாதுகாப்புச் சட்டக் கட்டமைப்பு: ஸாக்கி

சிங்கப்பூரில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் சிறாரையும் இளையர்களையும் பாதுகாக்கும் நோக்கில், ஒருங்கிணைந்தப பாதுகாப்புச் சட்டக் கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும் என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது அறிவித்துள்ளார்.

சிங்கப்பூர் வடிவமைப்பு, தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சமுதாயக் கேளிக்கை நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.

அண்மையில் பள்ளிவாசல் ஒன்றில் சிறார் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பெற்றோர்,சமுதாயத்தினர் மத்தியில் எழுந்த கவலைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் (முயிஸ்) அமைத்துள்ள இந்தப் புதிய கட்டமைப்பு, பள்ளிவாசல்களில் உள்ள ஊழியர்கள், தொண்டூழியர்களின் பொறுப்புகளைத் தெளிவுபடுத்துவதுடன், ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது சந்தேகத்திற்குரிய சம்பவங்கள் நிகழ்ந்தால் அது குறித்து அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கும் தெளிவான வழிமுறைகளையும் கொண்டிருக்கும்.

மேலும், தவறுகள் நடப்பதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் தொழில்முறை எல்லைகளைப் பேணுவது குறித்தும் பள்ளிவாசல் ஊழியர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படும்.

பள்ளிவாசல்களில் நடைபெறும் முறைசாராக் கூட்டங்கள் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். அனுமதியற்ற போதனைகள் அல்லது எல்லையை மீறிய நடத்தைகள் இடம்பெறுகின்றனவா என்பதைக் கண்டறிந்து தடுக்கும் அணுகுமுறை பின்பற்றப்படும்.

அத்துடன், பள்ளிவாசல் வளாகங்களில் வெளிச்சம், கண்காணிப்பு கேமரா வசதிகளும் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புப் பலகைகளும் சரியாக உள்ளனவா என்பதை உறுதிசெய்ய, இஸ்லாமியச் சமய மன்றத்தின் வட்டார அலுவலகங்கள் அவ்வப்போது திடீர்ச் சோதனைகளையும் பாதுகாப்புத் தணிக்கைகளையும் மேற்கொள்ளும்.

“சிங்கப்பூரில் உள்ள பள்ளிவாசல்கள் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பான இடமாகத் திகழ வேண்டும் என்பதில் பெற்றோர் விரும்புகின்றனர். அதே வேளையில், பள்ளிவாசல்கள் தொழுகைக்கும் கற்றலுக்கும் சமுதாய ஒன்றுகூடலுக்கும் என்றும் திறந்த மனதுடன் வரவேற்பளிக்கும் இடங்களாக இருப்பது அவசியம். பிள்ளைகளைப் பாதுகாப்பாக வைப்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்,” என அமைச்சர் ஸாக்கி குறிப்பிட்டார்.