சிறார் இலக்கியம்: இடைவெளிகளே நம் வாய்ப்புகள்!
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் ‘வாசிப்பு இயக்கம்’ 2023இல் 53 சிறு நூல்களோடு தொடங்கி, 2024இல் மேலும் 71 நூல்களை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பியது. 2021இல் உருவான தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இன்று 39 கிளைகளோடு இயங்குகிறது. பாரதி புத்தகாலயத்தின் ‘புக்ஸ் ஃபார் சில்ட்ரன்’, ஹெர் ஸ்டோரிஸின் ‘விங்ஸ்’, சென்னையின் ‘துலிகா’ போன்ற பதிப்பகங்கள் சிறார் இலக்கியத்துக்கான புதிய படைப்பாளிகளை உருவாக்குகின்றன. 1972இல் சிவகாசியில் தொடங்கிய முத்து காமிக்ஸ், இன்றும் லயன் முத்துவாக வாசகர்களை ஈர்க்கிறது. ‘குழந்தைக் கவிஞர்’ அழ. வள்ளியப்பா ஊன்றிய விதை இன்று பெருமரமாக வளர்ந்து நிற்கிறது. இனி கேள்வி ஒன்றுதான்... இந்த அடித்தளத்தின் மேல் எதைக் கட்டலாம்?
தினமும் பத்து நிமிடம்
வாசிப்பு இயக்க நூல்கள் ‘நுழை, நட, ஓடு, பற’ என நான்கு நிலைகளாக அமைந்திருக்கின்றன. எல்லாச் சிறார் நூல்களின் அட்டையிலும் இந்த நிலைகளைக் குறித்தால், பெற்றோருக்குத் தேர்வு எளிதாகும்.
ஜப்பானின் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் வகுப்பு தொடங்கும் முன் ‘அசா தொகு’ எனும் காலை வாசிப்பு நடக்கிறது. நான்கே விதிகள்: எல்லாரும் வாசிக்க வேண்டும், தினமும் வாசிக்க வேண்டும், பிடித்ததை வாசிக்கலாம், வாசித்தால் மட்டும் போதும். செலவே இல்லாத இந்த யோசனையை நாமும் நாளையே தொடங்கலாம்.
படப் புத்தக வயதைத் தாண்டியதும் பல குழந்தைகள் தமிழ் வாசிப்பையே விட்டுவிடுகிறார்கள். நட்பு, தேர்வுப் பதற்றம், உடல் மாற்றம், சமூக ஊடகம் எனப்பதின்வயதினரின் உண்மையான உலகைப் பேசும், அறிவுரை சொல்லாததமிழ் நாவல்கள் மிகக் குறைவு. விளிம்புநிலை, பழங்குடியினக் குழந்தைகளும், பெண் குழந்தைகளும், சிறுபான்மைச்சமூகக் குழந்தைகளும், ஒற்றைப் பெற்றோரின் குழந்தைகளும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளும் கதைகளின் நடுவில் நாயகர்களாக நிற்க வேண்டும். தன்னைப் போன்ற ஒருவரைப் புத்தகத்தில் காணும் குழந்தைதான் வாழ்நாள் வாசகராகிறார்.