📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 22, 2026 10:05 PM

“சித்தாந்தம் தேவையில்லை, சினிமாவே போதும்”

“சித்தாந்தம் தேவையில்லை, சினிமாவே போதும்”

தாராபுரம் பிரச்சாரத்தில் சீமான்

தாராபுரம்: “சினிமாவில் நடித்தாலே நாட்டை ஆளும் தகுதி வந்துவிடுகிறது என்ற எண்ணம் ஆபத்தானது” என்று தாராபுரம் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து, சீமான் கடந்த 2 நாட்களாக பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று மணக்கடவு பகுதியில் திறந்த வேனில் நின்றவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியது: “நாம் பெரும் நம்பிக்கையோடு இந்தத் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். ஒரு கட்சியில் வெற்றி பெற்றுவிட்டு, பின்னர் அதனை விட்டுவிலகி வேறு கட்சியில் இணைவது அநீதியும் கொடுமையும் ஆகும். இது மக்கள் பணத்தில் நடக்கும் தேவையற்ற செலவு. தங்களுக்கு வாக்களித்த மக்களை மதிக்காத இவர்கள், எப்படி மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்பதை வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும்.

அரசியல் என்பது தேர்தல் அரசியல், கட்சி அரசியல் என்றுதான் கட்டமைக்கப்பட்டுள்ளதே தவிர, மக்களுக்கான அரசியலாக இல்லை. கவர்ச்சிகரமான அறிவிப்புகளை முன்வைத்து அதிகாரத்திற்கு வருவது தேர்தல் அரசியல். மக்களைச் சம்பாதிக்க வைப்பதே மக்கள் அரசியல். மக்களின் நலன் சார்ந்து சிந்தித்துச் செயல்படுவதே உண்மையான அரசியல் ஆகும். கல்வியை எல்லோருக்கும் சமமாக வழங்கச் சிந்திக்கும் நாளே மக்களுக்கான அரசியலாக மலரும்.

கருத்தியல் புரட்சி மூலம் மக்களை வெல்லலாம் என நினைத்தோம், ஆனால் சித்தாந்தம் தேவையில்லை, சினிமாவே போதும் என்று காலம் உணர்த்திவிட்டது. எந்த மாநிலத்தில் சினிமா இல்லை? ஆனால், இங்கு மட்டும் சினிமாவே சித்தாந்தமாக உள்ளது. சினிமாவில் நடித்தாலே நாட்டை ஆளும் தகுதி வந்துவிடுகிறது என்ற எண்ணம் ஆபத்தானது” என்று சீமான் பேசினார்.