📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 24, 2026 03:03 AM

“சர்க்கரை விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்”

“சர்க்கரை விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்”

சென்னை: சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவில் சர்க்கரையின் விலை கடந்த 18 நாட்களில் சுமார் 20 சதவீதம் உயர்ந்திருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 20 அன்று சராசரி சில்லறை விலை கிலோ ரூ.68.50 ஆக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் 2 அன்று ரூ.45 ஆக இருந்த விலை ஒரே மாதத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் தமிழ்நாட்டில் தேநீர், காபி உள்ளிட்ட அன்றாடப் பொருட்களின் விலை உயர்வாக வெளிப்படத் தொடங்கியுள்ளது.

சர்க்கரை விலை உயர்வுக்கு உள்நாட்டு உற்பத்திக் குறைவு, பருவநிலை பாதிப்பு, பண்டிகைக் கால தேவை, உலகளாவிய பற்றாக்குறை, பதுக்கல் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன. இவை உண்மையான காரணிகளாக இருந்தாலும், ஒன்றிய அரசின் எத்தனால் (Ethanol) கொள்கை தொடர்பான கேள்விகளுக்கும் அரசு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும்.

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை இந்தியா 2025-ஆம் ஆண்டிலேயே எட்டியுள்ள நிலையில், கரும்பிலிருந்து சர்க்கரை உற்பத்திக்கு பதிலாக கணிசமான அளவு எத்தனால் உற்பத்திக்குத் திருப்பி விடப்படுவது உணவுக்கான சர்க்கரை விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து விரிவான ஆய்வு அவசியம்.

அக்டோபர் 31 வரை 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதித்திருப்பது தற்காலிக நிவாரணத்தை வழங்கலாம். ஆனால் உலகின் முக்கிய சர்க்கரை ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா, தற்போது இறக்குமதியை நாட வேண்டிய நிலைக்கு சென்றிருப்பது அரசின் கொள்கைத் திட்டமிடல் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

எனவே ஒன்றிய அரசு சர்க்கரை விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். பதுக்கலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான அளவு சர்க்கரையை நியாயமான விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும். அதேவேளை, எத்தனால் உற்பத்திக்காக சர்க்கரை மாற்றப்படுவதன் தாக்கத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

எரிசக்தி பாதுகாப்பு முக்கியமானது; அதே நேரத்தில் உணவுப் பாதுகாப்பு அதைவிடக் குறைவான முக்கியத்துவம் கொண்டதல்ல. மக்களின் அன்றாடத் தேவையான தேநீர், காபி முதல் இனிப்புகள் மற்றும் உணவுப் பொருட்கள் வரை விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினையை ஒன்றிய அரசு வெறும் சந்தை நிலவரமாகக் கருதாமல், உடனடி தேசிய கொள்கைப் பிரச்சினையாக அணுக வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.