சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பங்கேற்க பெங்களூரு பல்கலையிலும் எதிர்ப்பு
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க பல்கலை மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வழக்கு விசாரணை ஒன்றின்போது, இளம் தலைமுறையினர் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், 'கரப்பான்பூச்சிகள்' என்று விமர்சித்ததாக கூறப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, தேர்வுகளில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்தது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் வருவதற்கு, தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள 'நல்சார்' சட்ட பல்கலை மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அம்மாணவர்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்ய தடை விதித்து இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததால், பின்னர் அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. பார் கவுன்சில் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், 'நல்சார்' பல்கலை மாணவர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
தேசிய சட்டப் பள்ளி பல்கலை பட்டமளிப்பு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாணவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் எடுப்பது கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்களை அழைத்து, பட்டமளிப்பு விழாவில், பட்டம் வழங்க செய்வது மாணவர்களின் உழைப்பையும், போராட்டத்தையும் அவமதிக்கும் செயலாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.