📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 18, 2026 07:31 PM

சூர்யா

சூர்யா

சூர்யா - ஜோதிகா தேர்வு செய்த ஸ்காட்லாந்து கோட்டை…. திருமண பேக்கேஜ் செலவு இவ்வளவா?

சூர்யா–ஜோதிகா தங்களின் 20-வது திருமண நாளில் ஸ்காட்லாந்தின் Blairquhan Castle-ல் திருமண உறுதிமொழிகளை புதுப்பித்த நிலையில், அந்த பிரமாண்ட கோட்டையில் திருமண செலவு எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

திருமணமாகி 20 ஆண்டுகள்... காதல் மட்டும் குறையவில்லை; கொண்டாட்டமும் குறையவில்லை! தங்களது 20-வது திருமண நாளை முன்னிட்டு நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் மீண்டும் திருமண உறுதிமொழிகளை புதுப்பித்துக் கொண்டனர். அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம்தான் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ள Blairquhan Castle!

ஸ்காட்லாந்தின் Ayrshire பகுதியில் உள்ள Maybole என்ற நகருக்கு அருகே அமைந்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை, பிரமாண்டமான திருமண நிகழ்ச்சிகளுக்காக பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பசுமையான மலைப்பகுதிகளுக்கு மத்தியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த எஸ்டேட்டில், கோட்டைக்குள் 15 படுக்கையறைகள் இருப்பதுடன், விருந்தினர்கள் தங்குவதற்காக 8 தனித்தனி குடில்களும் உள்ளன.

சூர்யா - ஜோதிகா தங்களது 20-வது ஆண்டு திருமண நாளை இங்கு கொண்டாடிய புகைப்படங்கள் வெளியான நிலையில், “இந்த கோட்டையில் ஒரு திருமணம் நடத்த எவ்வளவு செலவாகும்?” என்ற கேள்வியும் பலரிடம் எழுந்தது. அதற்கான பதிலும் அந்த கோட்டையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இவ்வளவு செலவா?

Blairquhan Castle-ல் 60 அல்லது 80 விருந்தினர்களுடன் திருமண நிகழ்ச்சியை நடத்துவதற்கான பேக்கேஜ்கள் உள்ளன. 60 பேர் பங்கேற்கும் பேக்கேஜின் கட்டணம் 21,350 பவுண்டுகள். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.27.4 லட்சம். 80 விருந்தினர்களுக்கான பேக்கேஜை தேர்வு செய்தால் கட்டணம் 24,350 பவுண்டுகள், அதாவது சுமார் ரூ.31.2 லட்சம் வரை செலவாகும்.

இந்த தொகையில் கோட்டையை பிரத்யேகமாக பயன்படுத்துவதற்கான கட்டணமும், உணவு வழங்குவதற்கான செலவும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைவான விருந்தினர்களுடன் நெருக்கமான முறையில் திருமணத்தை நடத்த விரும்புபவர்களுக்காகவும் பேக்கேஜ்கள் உள்ளன. 30 பேருக்கான பேக்கேஜ் 20,560 பவுண்டுகள் (சுமார் ரூ.26.4 லட்சம்), 50 பேருக்கான பேக்கேஜ் 23,560 பவுண்டுகள் (சுமார் ரூ.30.2 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உணவுக்கும் தனி ஸ்பெஷல்!

திருமண நிகழ்ச்சிக்கான உணவையும் விருந்தினர்களின் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ள முடியும். பருவகாலத்தில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி மெனுக்களை உருவாக்கும் கேட்டரிங் நிறுவனங்களுடன் இந்த கோட்டை இணைந்து செயல்பட்டு வருகிறது.

விருந்தினர்களின் உணவு கட்டுப்பாடுகள் மற்றும் தனிப்பட்ட தேவைகளையும் கருத்தில் கொண்டு உணவு ஏற்பாடு செய்யப்படும் என கோட்டை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

200 ஏக்கரில் ஒரு கனவு உலகம்!

திருமண நிகழ்ச்சிகளுக்கு மட்டுமின்றி, தனிப்பட்ட பார்ட்டிகள், கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளையும் நடத்தும் வகையில் Blairquhan Castle அமைந்துள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தின் உள்ளே அமைந்துள்ள 15 அறைகளும் ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டவை. பழமையான பொருட்களுடன் நவீன வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும், கோட்டை வளாகத்தில் தங்க விரும்புபவர்கள் தனித்தனி குடில்களையும் தேர்வு செய்யலாம். இவற்றில் ஒரு குடிலுக்கான முன்பதிவு கட்டணம் 534 பவுண்டுகளில் இருந்து தொடங்குகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.68 ஆயிரம்.

பசுமையான காடுகள், திறந்த வெளிகள், மலைகள் என ஸ்காட்லாந்தின் இயற்கை அழகுக்கு நடுவே அமைந்துள்ள இந்த கோட்டைதான் சூர்யா - ஜோதிகாவின் 20 ஆண்டு திருமண கொண்டாட்டத்துக்கு பின்னணியாக அமைந்துள்ளது.

திருமணமாகி இரண்டு தசாப்தங்கள் கடந்த பிறகும், தங்களது காதல் தருணத்தை இப்படி ஒரு பிரமாண்டமான இடத்தில் மீண்டும் கொண்டாடிய சூர்யா - ஜோதிகாவின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன.