சுயம்புலிங்கம் தெரியுமா உங்களுக்கு? கடல் மண் குவியல் பிரார்த்தனை!
சுயம்புலிங்கம் தெரியுமா உங்களுக்கு? கடல் மண் குவியல் பிரார்த்தனை!
‘பாபநாசம்’ படத்தில் கமலின் கதாபாத்திரத்துக்கு பெயர் தந்த உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில், கடம்ப வேரிலிருந்து சுயம்புவாக வெளிப்பட்ட சிவலிங்கத்தின் தலமாகப் போற்றப்படுகிறது.
பலன் தரும் பரிகாரம்! - வி.ராம்ஜி
சுயம்புலிங்கம் என்று ‘பாபநாசம்’ படத்தில் கமலுக்குப் பெயர் வைக்கப்பட்டிருக்கும். ’சுயம்புலிங்கம்..?.’ என்று போலீஸ் அதிகாரி கேட்பார். ‘ஆமாங்க... இங்கே உவரி கோயில் இருக்குல்லா. அங்கே இருக்கிற சாமிபேருதான் சுயம்புலிங்கம். அந்தப்பேருதான் மேடம்’ என்று விளக்கம் தரப்படும். அந்த உவரி எனும் ஊரும் அங்கே கோயில்கொண்டிருக்கிற சுயம்புலிங்கத்தையும் தரிசிப்போம்.திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது உவரி கிராமம். தூத்துக்குடி- கன்யாகுமரி சாலையில் (இ.சி.ஆர்), தூத்துக்குடியில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும், திருச்செந்தூரில் இருந்து 38 கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும் உள்ளது உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயில். செந்தூரின் கடலோரத்தில் பிள்ளையான முருகப்பெருமான் குடிகொண்டிருக்க, உவரி கடற்கரையில் தந்தையான சிவன் அருளாட்சி நடத்துகிறார்.உவரி சுயம்புலிங்கத்தின் சரிதத்தை, கோயில் வரலாறை அறிவோமா?அந்தக்காலத்தில் பால், மோர், தயிர் ஆகியவற்றை பானைகளில் வைத்து, ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி, தலையில் சுமந்தபடி விற்று வந்தனர் யாதவ குல மக்கள். அவர்களில் ஒரு மூதாட்டி, ஒருநாள் அந்தக் கடம்பமர வேருக்கு அருகில் அமர்ந்து, அழுதுகொண்டிருந்தாள். ‘என்ன பொழப்பு இது! தினமும் பானைகளைச் சுமந்துக்கிட்டு, விக்கிறதுக்குக் கிளம்பினா, கடம்பவேர் தடுக்கி விழுந்து, பானை உடைஞ்சு, பாலும் மோரும் தரையில ஆறாட்டம் ஓடுறதே வேலையாப் போச்சு! காலம் போன காலத்துல கண்ணும் தெரியலை, மண்ணும் தெரியலை எனக்கு!’ என்று புலம்பினாள். வெறுங்கையுடன் வீடு திரும்பினாள். ‘என்னடா இது வினோதமா இருக்கு?’ என்று அவளின் கணவரும் வருந்தினார். கோபமானார்.
ஒருநாள்... அவளின் கணவர், அந்த கடம்ப மரம் அருகில் வந்தார். ‘உன்னோட அடிவேர் கூட இருக்கக்கூடாது! இதோ... உன்னை அழிக்கிறேன் பார்’ என்று அரிவாளால் அடிவேர்ப் பகுதியில் வெட்டினார். அவ்வளவுதான்... அங்கிருந்து குபுக்கென்று கிளம்பி, பீறிட்டு அடித்தது ரத்தம். அரண்டு போனார் தாத்தா. மிரண்டு போனவர் கைகால்கள் நடுங்க, விழுந்தார். ஓடவே முடியாத வயதில், தலைதெறிக்க ஓடினார். ஊருக்குள் வந்தார். ஊர்ப் பெரியவரிடம் சென்றார். நடந்ததையெல்லாம் சொன்னார். ‘என்னது வேரிலிருந்து ரத்தம் வருதா?’ என்று விழிபிதுங்கி, பயந்து போனார்கள் ஊர்மக்கள். ’இது சாமி குத்தம் போல...’ என்று பதைபதைத்தார்கள்.
அப்போது ஊர்ப் பெரியவருக்கு அருள்வாக்கு வந்தது. ‘வந்திருக்கறது சிவன். லிங்கமா, சுயம்புவா நமக்காக வந்திருக்காரு. உடனே சந்தனத்தை அரைச்சு, ரத்தம் வர்ற இடத்துல தடவுங்க. சரியாயிடும்!’ என்று அசரீரியாக அருள்வாக்கு வந்தது. தென்னையும் பனையும் சூழ்ந்த இடத்தில், சந்தன மரத்தையும் காட்டியருளினார் ஊர்ப்பெரியவர். பிறகு, சந்தனம் அரைத்துப் பூசியதும், ரத்தம் வழிவது நின்றது.
அதையடுத்து அங்கேயே சிறிய கூரை வேய்ந்தார்கள். கோயிலாக்கினார்கள். வழிபடத் துவங்கினார்கள். அந்த ஊர்ப் பெரியவரே கோயிலின் தர்மகர்த்தாவாக இருந்து, கோயிலை வளரச் செய்தார். பிறகு, மண்டபம் கட்டி, சந்நிதி அமைத்து, ஆலயம் உருவானதாம்! அதுதான் உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி திருக்கோயில்.
கடற்கரைக்கு அருகில் இருக்கிற அழகிய சிவாலயம். கடலில் குளித்துவிட்டு, அருகில் உள்ள தீர்த்தக் குளமான கிணற்று நீரிலும் நீராடி வழிபடுகின்ற வழக்கம் இன்றைக்கும் இருக்கிறார். இங்கே உள்ள ஸ்ரீகன்னி விநாயகரை வணங்கி, ஸ்ரீசுயம்பு லிங்கத்தையும் தரிசித்து வேண்டிக்கொண்டால், எல்லாப் பிரச்னைகளும் பறந்தோடும். சந்தோஷமும் நிம்மதியும் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் குடிகொள்ளும் என்கிறார்கள் உவரி வாழ் மக்கள்!கோயிலுக்குப் பின்னே, ஸ்ரீபூரணை - புஷ்கலையுடன் உள்ள ஸ்ரீவன்னியடி சாஸ்தா காட்சி தருகிறார். இவருக்கு, பொங்கல் படையலிட்டுப் பிரார்த்திக்கின்றனர், பக்தர்கள். இங்கே, அம்பாளுக்குச் சந்நிதி இல்லை. ஆனால், அவளின் இன்னொரு வடிவமாக கிராம தேவதையாக ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோயில் கொண்டிருக்கிறாள். இவளுக்கு, மஞ்சள் அல்லது குங்கும அபிஷேகம் செய்து வழிபட்டால், வீடு- வாசலுடன் இல்லறத்தைச் சிறக்கச் செய்வாள் என்பது ஐதீகம். கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ்வார்கள் என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள்.‘’உடன்குடிதான் சொந்த ஊர். எங்களுக்கு இஷ்ட தெய்வம், காவல் தெய்வம் எல்லாமே சுயம்பு சாமிதான். சக்தி வாய்ந்தவர் இவர். சென்னைக்குப் போய் பல வருஷமாகிட்டாலும், எப்பத் தோணுதோ அப்பல்லாம் இங்கே ஓடி வந்துடுவேன்’’ எனச் சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்.கடலில் இருந்து மணலை எடுத்து வந்து, கரையில் குவியலாக்கிவிட்டு, சிவனாரை வணங்குகின்றனர். தங்கள் வேண்டுதலுக்கேற்ப 11 முறை 108 முறை என மணல் பெட்டி சுமக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும், சுயம்புலிங்க ஸ்வாமிக்கு பால், தேன் மற்றும் சந்தனத்தால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
அதேபோல், வீட்டில் எவரேனும் பிரச்னையில் சிக்கியுள்ளார் அல்லது தீராத நோயால் அவதிப்படுகிறார் என்றால், உடனே அவரை இங்கு அழைத்து வந்து, சுயம்புலிங்கமூர்த்தியின் பிள்ளையாக அறிவித்து, ‘உன் புள்ளையை நீதான் காக்கணும்’ என்று வேண்டுகின்றனர். அதாவது சுயம்புலிங்கத்துக்கு தத்துக்கொடுக்கிற வழக்கம் இன்றைக்கும் முக்கியமான வேண்டுதலாக, பரிகாரமாக செய்யப்படுகிறது. நோய் தீர்ந்ததும், தங்களால் இயன்ற தொகையை ‘பிடிபணம்’ எனச் செலுத்தி, நேர்த்திக் கடனை அடைக்கின்றனர். இந்தப் ‘பிடிபணம்’ நேர்த்திக் கடன் சம்பிரதாயம் வந்ததற்கு ஒரு சுவையான கதையும் உண்டு!குமரி மாவட்டத்தில் உள்ள ஆயர் குலத்தோர், அந்தக் காலத்தில் இங்கு நடந்தே வந்து தரிசிப்பார்கள். அப்போது வழியில், ஒரு தென்னந்தோப்பில் தங்கி இளைப்பாறுவார்கள். ஒருமுறை, அந்தத் தோப்பின் உரிமையாளர் கடும் நோயால் அவதிப்பட்டார். இளைப்பாறியவர்கள், ‘எங்களோட சுயம்புலிங்க சாமி, உன்னைக் கைவிட மாட்டாரு’ எனச் சொல்லிவிட்டு, உவரிக்கு வந்து தரிசனம் முடித்து, விபூதி பிரசாதத்துடன் தோப்புக்குச் செல்ல, பூரணமாகக் குணமாகி இருந்தாராம் அந்த தோப்புக்காரர்.
சுயம்புலிங்க ஸ்வாமியின் அருளை நினைத்து, நெகிழ்ந்தவர், உவரி தலத்துக்கு வந்து, நாணயம் காணிக்கை செலுத்தினாராம். அப்போது திருவிதாங்கூர் நாணயம் இருந்த காலம் அது! அன்று முதல், ‘பிடிபணம்’ எனும் நேர்த்திக்கடன் நடைமுறைக்கு வந்ததாம்!
சுயம்பு மூர்த்தமாக, கடம்ப வேரின் அடியில் இருந்து வெளிப்படும்போது, சந்தனம் பூசப்பட்டது அல்லவா! எனவே, இன்றைக்கும் இங்கு வரும் பக்தர்களுக்கு (கோயிலுக்குள் சட்டை அணியக்கூடாது), கட்டையில் அரைக்கப்பட்ட சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தச் சந்தனத்தை உடலில் பூசிக்கொள்ள, சகல நோய்களும் தோஷங்களும் விலகும். தீயசக்திகள் நம்மை நெருங்காது என்கிறார்கள் பக்தர்கள்.
உவரி சுயம்புலிங்க ஸ்வாமியைத் தரிசித்து, சந்தனத்தை உடலில் மணக்க மணக்கப் பூசிக் கொண்டு, கடல் காற்றை அனுபவிக்கும்போது, கவலையாவது துக்கமாவது! கடல்காற்றில் மண்ணோடு மண்ணாகப் போகும் என்பதுதான் ஸ்தல வரலாற்றின் பெருமை!