சவுதி அரேபியாவில் அமைதியும் இயல்புநிலையும் திரும்ப வேண்டும்; இந்தியா வலியுறுத்தல்
புதுடில்லி: 'சவுதி அரேபியாவில் அமைதியும், இயல்புநிலையும் திரும்ப வேண்டும்' என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: சவுதி அரேபியாவில், அராம்கோ தலைமையகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கான உள்கட்டமைப்புகள் மீதான இத்தகைய தாக்குதல்கள் அனைத்தையும் நாங்கள் கண்டிக்கிறோம்; அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இச்செயல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
சவுதி அரேபியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் அந்நாட்டு மக்களுடனும் அரசுடனும் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம்; அப்பகுதியில் அமைதியும் இயல்புநிலையும் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறோம். சவுதி அரேபியாவில் உள்ள நமது தூதரகம் அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது.
அவர்களின் நலன் கருதி அவ்வப்போது அறிவுறுத்தல்களையும் வெளியிட்டு வருகிறது. விமான நிலையங்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன; இது இந்திய விமான நிறுவனங்களையும், குறிப்பாக ரியாத், தம்மாம், மதீனா மற்றும் ஜெட்டா நகரங்களுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தையும் பாதித்துள்ளது. பயணிகள் மற்றும் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் சிக்கித் தவிப்பவர்களுக்குத் தூதரகம் உதவிகளை வழங்கி வருகிறது.
அக்டோபர் 10ம் தேதி நடந்த தாக்குதலில் 12 பேர் காயமடைந்தனர்; துரதிர்ஷ்டவசமாக அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரின் விருப்பப்படியும், தூதரகத்தின் உதவியுடனும் அவரது இறுதிச் சடங்குகள் ரியாத்தில் நடைபெற்றன. காயமடைந்த மற்ற 11 பேரில், மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். மேலும் 8 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் நால்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
தூதரக அதிகாரிகள் அவர்களைத் தொடர்ந்து நேரில் சந்தித்து வருவதுடன், அவர்களின் குடும்பத்தினருடனும் தொடர்பில் உள்ளனர்.
வெளிநாடுகளில் வசிக்கும் நமது குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக எங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய நாங்கள் தொடர்ந்து உறுதியுடன் இருக்கிறோம்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஈரானின் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரான மொஹ்சென் ரெசேயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு விவகாரங்கள் மற்றும் சர்வதேச நிகழ்வுகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். இந்திய மாலுமிகள் மற்றும் இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.