எஃப்1 பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக இருவர் கைது
எஃப்1 கார்ப் பந்தயம் நடைபெறும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) அன்று ரிபப்ளிக் பொலிவார்ட்டில் போட்டி நடைபெறும் பகுதியில் ஒருவரை அங்கிருந்த ஊழியர்கள் பிடித்து வைத்திருப்பதாக மதியம் 3.00 மணியளவில் தகவல் கிடைத்தது என்று சனிக்கிழமை (அக்டோபர் 10) வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது.
முதற்கட்ட விசாரணையில் இரு ஆடவர்களும் 1.45 மணியளவில் செல்லுபடியாகாத நுழைவுச்சீட்டுகளுடன் தெமாசெக் அவென்யூ பகுதியில் நுழைய முயன்றது தெரியவந்தது.
நுழைவாயிலில் 35 வயதான நபரின் நுழைவுச்சீட்டு செல்லுபடியாகாததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இருப்பினும், 39 வயதான மற்றொரு நபர், செல்லுபடியாகாத நுழைவுச்சீட்டுடன் ஒரு வழியாக உள்ளே நுழைந்துவிட்டார். பின்னர், அவர் ஊழியர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஒதுக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்துள்ளார். உடனே அங்கிருந்த ஊழியர்கள் அவரைப் பிடித்துத் தடுத்து வைத்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
இதற்கிடையில், 35 வயது நபர் தெமாசெக் பொலிவார்ட் பகுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று காவல்துறை கூறியது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இந்நிலையில் அத்துமீறி நுழைந்ததாக 39 வயது நபர்மீது சனிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை, $1,500 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். 35 வயது நபரை காவல்துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது.