📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 19, 2026 10:03 PM

‘எம்எல்ஏக்களுக்கு கார் வாங்க நிதி இருக்கிறது, விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு நிதி இல்லையா?’

‘எம்எல்ஏக்களுக்கு கார் வாங்க நிதி இருக்கிறது, விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு நிதி இல்லையா?’

கடலூர்: எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் வாகனம் (கார்), பராமரிப்புச் செலவு வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் விஜய் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என அறிவித்தார். தொடர்ந்து அரசு வாகனங்களை பராமரிப்பதற்காகவும், வாகனத்துக்கு ஓட்டுநர், எரிபொருள் உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம், அலுவலக உதவியாளருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார்.

இதற்காக உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஆணைகள் வெளியிடப்படும் என்றார். இதற்கு விவசாய சங்கங்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது.

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன் விடுத்துள்ள அறிக்கையில், “சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்க, உதவியாளர்கள் நியமிக்க சம்பளம் கொடுக்க நிதி இருக்கும்போது, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய நிதி இல்லையா அல்லது மனம் இல்லையா முதல்வரே.

234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வாங்க நிதி இருக்கு. ஆனால், எதைக் கேட்டாலும் அரசு நிதி நெருக்கடியில் இருக்கிறது எனக் கூறுகிறீர்கள். நம்முடைய முதல்வர் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் ஊரான் வீட்டு நெய்யில் உங்களுக்கு ஸ்வீட்டா முதல்வரே. மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடி தண்ணீர் இல்லை.

விவசாயம் செய்ய தண்ணீர் இல்லை. காவேரி மற்றும் கொள்ளிடத்தில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டினால் ஒரு ஆண்டிற்கு 20 தடுப்பணைகள் கட்டலாம். நிலத்தடி நீர்மட்டம் உயரும், மீன்பிடி தொழிலும் பெருகும். லட்சக்கணக்கான விவசாயிகளும் மீன் பிடி தொழிலாளர்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். மாற்றம் மாற்றம் என்றீர்களே. இதுதான் அந்த மாற்றமா முதல்வரே. இது மாற்றம் இல்லை, மக்களுக்கு ஏமாற்றமே” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.