எனக்கு வரும் பெண் இப்படித்தான் இருக்க வேண்டும்.. லிஸ்ட் பெருசாக போட்ட ஜேசன் சஞ்சய்
சென்னை: விஜய் - சங்கீதா மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் சிக்மா திரைப்படம் 28ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அவர் இயக்கியிருக்கும் முதல் படம் என்பதால் இதன் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஜேசனும் தன் பங்குக்கு ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாகியிருக்கிறார். இந்நிலையில் தனக்கு வரவிருக்கும் மணமகள் குறித்து பேசியிருக்கிறார்.
விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருப்பது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான். அதை ஓரளவுக்கு ஈடுகட்டும் விதமாக அமைந்திருக்கிறது ஜேசன் சஞ்சய்யின் வருகை. முதலில் விஜய்யின் வேட்டைக்காரன், போக்கிரி ஆகிய படங்களின் பாடல்களில் சில நிமிடங்கள் தலை காட்டிய அவர்; அதனைத் தொடர்ந்து வெளிநாட்டுக்கு சென்று முழு நேரமும் சினிமா தொடர்பான படிப்பை பயின்றார். மாணவராக இருந்தபோதே சில குறும்படங்களை இயக்கி அனைவரையும் ஈர்த்தவர்.
சிக்மா இயக்குநர்: கல்லூரியை முடித்த அவர்; லைகா பேனரில் சிக்மா படத்தை இயக்க ஒப்பந்தமானார். அந்த அறிவிப்பு வந்தபோது நெப்போட்டிஸத்தில் இவரது பெயர் அதிகம் அடிபட்டது. அவரோ தந்தை போன்றே சைலெண்ட்டாக இருந்து காரியத்தில் மட்டும் கண் வைத்திருந்தார். இந்தியா உட்பட பல லொக்கேஷன்களில் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. சிக்மாவில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க; ராஜூ சுந்தரம், சம்பத் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைத்திருக்கிறார்.
சில நாட்களில் ரிலீஸ்: படமானது முதலில் ஜூலை மாதம் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் அந்த மாதம் நீண்ட இழுபறிக்கு பிறகு விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வந்தது. தந்தை படத்தோடு மோதுவது வேண்டாத வேலை என்று முடிவெடுத்த அவர்; ரிலீஸை தள்ளி வைக்க சம்மதித்தார். அதன்படி, ஆகஸ்ட் 28ஆம் தேதி படமானது தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. அதனையொட்டி ப்ரோமோஷன் பணிகளிலும் அவர் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்.
சஞ்சய் பேட்டி: சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "எனக்கு இப்போதுவரைக்கும் காதலி கிடையாது. ஆனால் எனக்கு அட்வெஞ்ச்சரான கேரக்டர் கொண்ட பெண் மனைவியாக வர வேண்டும். புது புது இடங்களுக்கு செல்ல வேண்டும். பொருளாதார ரீதியாக சுதந்திரமாகவும், யாரையும் சார்ந்தும் இருக்கக்கூடாது. எந்த விஷயத்திலும் சார்ந்திருப்பது எனக்கு பிடிக்காது.
ஓரம் போனு சொல்வேன்: முக்கியமாக தமிழ் சினிமா பார்க்க வேண்டும். தமிழ் பாடல் கேட்க வேண்டும். தமிழ் பாடல்கள் எல்லாம் கேட்கமாடேன் என்று சீன் போட்டால் ஓரம் போ என்று சொல்லிவிடுவேன். நம்முடைய துணையும் கொஞ்சம் தமிழ் பாடல் கேட்டால்தான் நம் ஊரோடு வேரூன்றி இருக்க முடியும்" என தெரிவித்தார். இந்தப் பேட்டி சென்சேஷனல் ஆகியிருக்கிறது. முன்னதாக, இதே பேட்டியில் நடிக்கும் எண்ணம் இருக்கிறது என்பதையும் அவர் தெளிவுப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.