என்ன செஞ்சுருக்க?.. சுப்ரமணியபுரம் எங்க இருக்கு?.. அறுக்குறானுங்க.. சசிகுமாரிடம் பதறிய கே.பாலசந்தர்
சென்னை: சசிகுமார் கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். இரண்டு படங்கள் மட்டுமே அவர் இயக்கியிருந்தாலும் அந்த இரண்டு படங்களும் இன்றுவரை கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதிலும் சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டு படங்களுக்கு பிறகு இயக்கத்தை நிறுத்திய சசிகுமார் நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். அவரது நடிப்பில் இப்போது வதந்தி 2 வெப் சீரிஸ் வந்திருக்கிறது.
இயக்குநர்கள் பாலா மற்றும் அமீரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சசிகுமார். சேது, மௌனம் பேசியதே உள்ளிட்ட படங்களில் பணியாற்றிவிட்டு தனியாக படம் இயக்க திட்டமிட்டு கதையை உருவாக்கி சாந்தனுவிடம் கூறினார். ஆனால் அதில் அவர் நடிக்க விரும்பவில்லை. அதேபோல் படத்தை தயாரிக்கவும் எந்த கம்பெனியும் முன்வரவில்லை. இதனையடுத்து ஜெய்யிடம் கதை சொல்லி ஓகே ஆனதை அடுத்து படத்தை அவரே தயாரித்து இயக்கி நடிக்கவும் செய்தார்.
பந்தயம் அடித்த சுப்ரமணியபுரம்: மதுரையை மையமாக வைத்தும், அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களின் சுயநலத்துக்காக பலியாகும் இளைஞர்களை மையமாக வைத்தும் உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. படத்தின் போஸ்டரை பார்த்து கிண்டல் செய்தவர்கள் எல்லாம் படத்தை பார்த்து வாயடைத்துப்போனார்கள். அந்த அளவுக்கு சசிகுமாரின் மேக்கிங் அட்டகாசமாக இருந்தது. சிறப்பான எமோஷனல், சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகள், வசனங்கள், பாடல்கள் என பக்கா பேக்கேஜாக அமைந்தது சுப்ரமணியபுரம் திரைப்படம்.
ஒதுங்கிய சசிகுமார்: முதல் படமே மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் என்ற பெயரை எடுத்த சசிக்குமார் அடுத்ததாக ஈசன் படத்தை இயக்கினார். அந்தப் படம் ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் அந்தப் படத்தோடு இயக்கத்திலிருந்து ஒதுங்கிவிட்டார் சசிக்குமார். அதன் பிறகு ஹீரோவாக நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார். அவர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் சக்கைப்போடு போட்டது.
ஃப்ரீடம் திரைப்படம்: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வெற்றி சசியின் மார்க்கெட்டை உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தியது. அதேசமயம் இந்தப் படத்தின் வெற்றியால் சம்பளத்தை எல்லாம் உயர்த்தமாட்டேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது அவரது நடிப்பில் வதந்தி வெப் சீரிஸ் வந்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க அவரது பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
சசியின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "சுப்ரமணியபுரம் படத்தின் முதல் பாதி காமெடி, காதல் என செல்லும். அது பாலசந்தர் சாருக்கு ரொம்ப பிடித்துப்போனது. முதல் பாதி முடிந்தவுடன்; எங்கே டா இருக்கு அந்த சுப்ரமணியபுரம்; இவ்வளவு ஜாலியாக இருக்காங்க என சொன்னார். நான் மதுரையில்தான் இருக்கிறது என்றேன். அதற்கு அவரோ, இனிமேல் மதுரை வந்தால் கண்டிப்பாக அங்கே செல்வேன் என சொன்னார்.
அப்படியே இரண்டாவது பாதியும் முடிந்தது. அதை பார்த்துவிட்டு என் முதுகில் தட்டிய அவர்; எங்கே டா இருக்கு அந்த சுப்ரமணியபுரம்; நீ என்னடா பண்ணி வெச்சுருக்க, இப்படி அறுத்துக்குறானுங்க.. இனிமேல் மதுரைக்கு வந்தால் சுப்ரமணியபுரம் பக்கம் மட்டும் வரவேமாட்டேன் என்றார். இரண்டாவது பாதி பார்த்த பிறகு அவர் அப்படித்தான் சொல்வார் என எனக்கு முன்னரேட் தெரியும்" என குறிப்பிட்டிருக்கிறார்.